வவுனியாவில் அரச காணிகளை ஆட்டையை போட்டு விற்பனையில் ஈடுபடும் விசமிகள்!

வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலைய வீதியோரத்தில் காணப்படும் வீதி அபிவிருத்தித் திணைக்களம், புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான 182 வது கிலோ மீற்றர் மைல் கல் வரையான வீதியோரக் காணிகளை மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் தனி நபர் ஒருவர் அத்துமீறி அபகரித்து வருவதுடன் அக்காணிகளை பொதுமக்களுக்கு பணம் வாங்கி விற்பனை செய்து வருகின்றார்.

இவ்வாறு செயற்பட்டு வரும் நபர் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியபோதும் குறித்த நபரைக் கைது செய்து அவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் பொலிசார் மேற்கொள்ளவில்லையென குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே அரச காணியை அபகரித்து விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வரும் குறித்த நபரைக் கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கொக்குவெளி பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகள் சிலவற்றை அபகரித்து பிற பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

இவ்விடயம் குறித்து பொலிசார் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது தாண்டிக்குளம் பகுதியில் அரச காணியை அபகரித்து விற்பனை செய்து வருகின்றதை தடுத்து நிறுத்துமாறு மேலும் கோரி வருகின்றனர்.