எனக்கு எதிராக ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது!

தனக்கு எதிராக ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

வன்னிமாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வவுனியா பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்த கருத்திற்கு எதிராக ஆச்சிபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வவுனியாவை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் போதைபாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால் இளைஞர்கள் முதல் மாணவர்கள் வரை தவறான வழியில் செல்லும் நிலமை அதிகரித்துச்செல்கின்றது.

எனவே அதனை கட்டுப்படுத்தி போதைப்பாவனையற்ற ஒரு முன்மாதிரியான சமூகத்தை கட்டி எழுப்பவேண்டிய தேவையும் பொறுப்பும் எம் அனைவரிடமும் இருக்கின்றது.

அந்தவகையில் ஆச்சிபுரம் பகுதியில் போதை புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதனை தடைசெய்யவேண்டும் என்றும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களே என்னிடம் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கமையவே,அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பொலிசாரை பணித்திருந்தேன்.

எனவே எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்,அரசியல் உள்நோக்கம் கொண்டது. பொதுமக்களை தூண்டிவிட்டு அதில் சிலர் அரசியல் சுயலாபம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் சென்று விரைவில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளேன்.

அத்துடன் எதிர்கால சந்ததிகளின் நன்மைகருதி வன்னியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்றார்.