ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் 11 தமிழக வீரர்கள் இவர்கள் தான்!

2020ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்று விளையாடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜெகதீசன், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், இந்திய பேட்ஸ்மேன் முரளிவிஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில், சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு இந்த ஆண்டு தக்கவைக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2017-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல்.-ல் விளையாடி வருகிறார்.

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் (டி.என்.பி.எல்.) அசத்தியதன் மூலம் ஐ.பி.எல்.-ல் வாய்ப்பு பெற்றவர் ஆவார். 2017-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே எடுத்தார். தற்போது ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள அவர் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

அதே போல சென்னையில் வசிக்கும் 29 வயதான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஐதராபாத் அணியின் சரியான கலவைக்கு முக்கியமான வீரராக இருக்கிறார். மிதவேகப் பந்து வீச்சு, பேட்டிங்கால் அணிக்கு அனுகூலமாக இருப்பார்.

கொல்கத்தா அணி

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மேலும் இரு தமிழ்நாட்டு வீரர்களான சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, எம்.சித்தார்த் இருப்பது சிறப்பம்சமாகும்.

டெல்லி அணி

பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இழுக்கப்பட்ட ஆர்.அஸ்வின் சுழல் ஜாலத்தில் எதிரணியை மிரட்டக்கூடியவர்.

பஞ்சாப் அணி

சில ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைபயிற்சி பவுலராக வலம் வந்த 30 வயதான முருகன் அஸ்வின் இந்தாண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார்.