மல்யுத்தத்தில் தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற 27 வயது வீரருக்கு தூக்கு தண்டனை!

மல்யுத்தத்தில் தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற 27 வயது வீரருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

ஈரான் நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்களில் மல்யுத்தமும் ஒன்று. இந்த விளையாட்டில் நவித் அஃப்ஹரி என்ற 27 வயது நிரம்பிய இளம் வீரர் ஈரான் நாட்டின் தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

Advertisement

நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தின்போது அரசு அலுவலகத்தில் காவலாளி வேலை செய்துவந்த ஹசின் தோர்க்மென் என்ற நபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை செய்தது மல்யுத்த வீரர் நவித் அஃப்ஹரி தான் என குற்றம் சுமத்தப்பட்டது கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரது சகோதரர் வஹித் மற்றும் ஹபிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஷரிஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் காவலாளி கொல்லப்பட்டதற்கு எந்த ஒரு சிசிடிவி காட்சிகள் உள்பட எந்த ஒரு ஆதாரமாக இல்லை.

இதற்கிடையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை பெற்று வந்தது.

இந்த விசாரணையில் நவித் அஃப்ஹரி முக்கிய குற்றவாளி என்றும் மற்றும் அவரது சகோதரர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நவித் அஃப்ஹரிக்கு தூக்கு தண்டனையும், அவரது சகோதரர்களில் வஹித்திற்கு 54 ஆண்டுகளும் ஹபிபிற்கு 27 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மல்யுத்த வீரர் நவித் அஃப்ஹரிக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை எனவும்,

அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும்,

பல்வேறு அமைப்புகளும் ஈரான் அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. மேலும், நவித்திற்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டதற்கு உலக மல்யுத்த விளையாட்டு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்க மறுத்த ஈரான் அரசு கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி மல்யுத்த வீரர் நவித் அஃப்ஹரிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது.

நவித் அஃப்ஹரிக்கு இன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நவித் அஃப்ஹரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்துள்ளது.