இருபதாவது திருத்தமும் ராஜபக்சக்களும்!

இப்போதிருக்கும் யாப்பு 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்து நடந்த பெரும்பாலான ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் ஜனாதிபதி முறைமையை அகற்றுவோம் அல்லது நிறைவேற்று அதிகாரத்தை குறைப்போம் நாடாளுமன்றத்தை பலப்படுத்துவோம் என்று வாக்குறுதிகளை வழங்கியே தேர்தல்களில் போட்டியிட்டார்கள்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின் தங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டார்கள். நிறைவேற்று அதிகாரமுடைய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்ததும் அவர்களுடைய லிபரல் முகமூடிகள் கழண்டு விழுந்து விடும். ஜனாதிபதி ஆட்சி காலத்தின் கடைசி நாள்வரை நிறைவேற்று அதிகாரத்தின் கடைசித்துளி வரை அனுபவித்துவிட்டே அவர்கள் ஆட்சியை விட்டு போவது உண்டு.இதில் ஒப்பீட்டளவில் லிபரல் என்று வர்ணிக்கபட்ட திருமதி சந்திரிகாவும் விதிவிலக்கல்ல.

ஆனால் விதிவிலக்காக ராஜபக்சக்கள் நடந்து முடிந்த இரண்டு தேரதல்களிலும் அவ்வாறான லிபரல் வாக்குறுதிகள் எவற்றையும் வழங்கி மக்கள் ஆணையக் கேட்கவில்லை. அதிகாரத்தை கூட்டுவோம் என்று கேட்டுத்தான் மக்கள் ஆணையை பெற்றிருக்கிறார்கள். 19 ஆவது திருத்தம் வெளிநாடுகளின் தூண்டுதல்கள் காரணமாக உருவாக்கபட்டது. எனவே அதை அகற்ற வேண்டும். நாட்டை ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து ஆட்சி செய்வதற்கு இரும்பு மனிதர்கள் வேண்டும். அதாவது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறித்தான் அவர்கள் இம்முறை மக்களிடம் ஆணை கேட்டார்கள்.

Advertisement

அவர்கள் கேட்ட ஆணையை சிங்கள மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன் பிரகாரம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு தேவையான அசுர பலத்தோடு ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். ஆட்சிக்கு வந்த கையோடு அவர்கள் யாப்பில் கை வைக்கப் போகிறார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகப்படுத்தும் 19ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் 20ஆவது திருத்தத்தை அவர்கள் கொண்டு வரப் போகிறார்கள்.

இந்த இருபதாவது திருத்தத்திற்கான உத்தேச வரைவு செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. அது வெளியிடப்பட்ட பொழுது அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று ராஜபக்சக்கள் கணக்குப் போட்டார்கள். குறிப்பாக மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு தேவையான அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்த படியால் அந்த வெற்றியின் அலைக்குள் எதிர்ப்புகள் அமிழ்ந்து போய் விடும் என்றும் அவர்கள் கணக்குப் போட்டார்கள்.

ஆனால் எதிர்பார்த்ததை விடவும் எதிர்ப்பு பலமாக காணப்பட்டது. அதை முதலில் எதிர்த்தது யு.என்.பியின் இரண்டு பிரிவுகளும்தான். ஏனெனில் 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது அந்த கட்சி தான். அடுத்ததாக எதிர்த்தது கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும். இவ்விரண்டு தரப்பும் ரணில் விக்கிரமசிங்கவோடு சேர்த்து 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தன. எனவே அவர்களும் அதை எதிர்த்தார்கள்.

அடுத்தபடியாக எதிர்த்தது மேற்கத்திய நாடுகள். மேற்கத்திய ஊடகங்கள் அதை எதிர்த்து எழுதின. ராஜபக்சக்கள் அரசர்களாக வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என்ற தொனிப்பட விமர்சனங்களை முன்வைத்தன. மேற்கு நாடுகளின் தூதுவர்களும் இது தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த எதிர்ப்புகள் யாவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். லிபரல் ஜனநாயகப் பரப்பில் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு கிடையாது. எனவே மேற்கு நாடுகளும் ஐநாவும் யு.என்.பி.யும் அதன் பங்காளிகளும் அதை எதிர்த்ததில் நூதனம் எதுவுமில்லை. ஆனால் நூதனமானது எதுவெனில் ராஜபக்சக்களின் சொந்தக் கட்சி ஆகிய தாமரை மொட்டு கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு கிளம்பியதுதான்.

ஏன் அவ்வாறு எதிர்ப்புகள் கிளம்பின ?ஏனென்றால் அந்த 20ஆவது திருத்தத்தை வரைந்தது அரசியல்வாதிகள் அல்ல என்று கருதப்படுவதுதான். கோட்டாபய ராஜபக்சவின் பின்னால் நிற்கும் “வியத்மக” என்று அழைக்கப்படும் சிந்தனைக் குழாம் ஒன்று தான் அதை வடிவமைத்தது என்று கருதப்படுகிறது. கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிப் பாதைக்குரிய நிகழ்ச்சி நிரலை அவர்களே உருவாக்குகிறார்கள். வியத்மக அமைப்பு எனப்படுவது ஓய்வுபெற்ற படைப் பிரதானிகள்; ராஜதந்திரிகள்; மகா சங்கத்தினர்; புத்திஜீவிகள்; படைபாளிகள் ; ஊடகவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒரு சிந்தனைக் குழாம் ஆகும். இது கோட்டாபய ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலை பெருமளவுக்கு வடிவமைக்கின்றது.

வியத்மக அமைப்பின் கீழ் மற்றொரு கீழ்மட்ட அமைப்பு “எலிய” என்ற பெயரில் இயங்குகிறது. அது கிராம மட்ட பௌத்த விகாரைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த வெகுசன வலைப் பின்னலைக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறது. கோட்டாபயவின் வெற்றிகளுக்காக அடிமட்ட மக்கள் மத்தியில் உழைப்பது “எலிய” அமைப்புத் தான். இந்த இரண்டு அமைப்புகளும் தான் நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்சக்கள் பெற்ற வெற்றிகளுக்கு பின்னணியில் நின்றன.

ஆனால் அதன் அர்த்தம் கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வியத்மகவும் எலியவும் மட்டும் தான் காரணம் என்பது அல்ல. கட்சியின் நடுநாயகமாக இருப்பவர் மகிந்த ராஜபக்ச. ஒரு மூத்த தலைவராக கட்சியின் ஜனவசிய முகமாக அவரே காணப்படுகிறார். ஆனால் அவருடைய இளைய சகோதரனாகிய ஜனாதிபதியின் பின்னணியில் நிற்கும் அமைப்பு கட்சியின் பெருந் தலைவருடைய ஆதரவாளர்களை புறந்தள்ளிவிட்டு ஒரு யாப்புத் திருத்தத்தை உருவாக்கியமை என்பது மஹிந்தவின் ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல பொதுவாக புதிய யாப்புத் திருத்தம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட பின்னரே சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படுவதுண்டு. ஆனால் இம்முறை அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட பின்னர்தான் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 3 ஆம் திகதி 20 ஆவது திருத்தத்தின் நகல் வரைவு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. உடனடுத்து மகிந்த ராஜபக்ச அது தொடர்பாக ஆய்வு செய்வதற்கென்று 7 பேர்கள் அடங்கிய நாடாளுமன்றக் குழு ஒன்றை நியமித்தார். அக்குழு தன்னுடைய அறிக்கையை விரைவாக சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.

அக்குழுவின் பரிந்துரைகள் இணைக்கப்பட்டு உத்தேச வரைவு திருத்தப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் செப்டம்பர் 3 ஆம் திகதி அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அதே உத்தேச வரைவு தான் இப்பொழுது நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதில் திருத்தங்கள் ஏதும் செய்யப்படவில்லை. அதாவது மஹிந்த ராஜபக்ஷ நியமித்த குழுவின் பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் சட்ட வரைபு விவாதிக்கப்படும் பொழுது அதில் வேண்டுமானால் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம் என்று கோத்தாபய முடிவாகக் கூறிவிட்டார். இது எதைக் காட்டுகிறது? ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் பூசல்கள் ஏற்பட்டிருப்பதையா? அல்லது வியத்மக அமைப்பின் கை மேலோங்கி வருவதையா?

செப்டெம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச வரைபிற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து எழு நாட்களுக்குள் வழக்குத் தொடுக்கலாம்.அவ்வாறு யாரும் வழக்குத் தொடுக்கா விட்டால் அது நாளுமன்றத்தில் எழு நாட்களின் பின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் . யாராவது வழக்குத் தொடுத்தால் அந்த வழக்குகளை விசாரித்து 3 கிழமைகளுக்குள் நீதிமன்றம் தீர்ப்பை வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தேச வரவை எதிர்க்கவில்லை என்றால் அது அடுத்தகட்டமாக நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு விடப்படும்.

நீதிமன்றம் உத்தேச 20 ஆவது வரைவை நிராகரிக்கும் வாய்ப்புக்கள் குறைவு என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏனெனில் உத்தேச வரைபில் இருப்பவை ஏற்கனவே பதினெட்டாவது திருத்தத்தில் இருந்தவை தான். மகிந்த ராஜபக்சவால் கொண்டுவரப்பட்ட பதினெட்டாவது திருத்தத்தை அப்பொழுது நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தவில்லை. எனவே ஏற்கனவே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத விடயங்களே இப்பொழுது 20ஆவது திருத்தத்தில் காணப்படுவதால் இதுவிடயத்தில் நீதிமன்றம் பெரிய அளவில் முட்டுக்கட்டைகளைப் போடாது என்று ஓர் எதிர்பார்ப்பு துறைசார் நிபுணர்கள் மத்தியில் காணப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அதை எதிர்க்கும் தரப்புக்கள் சில வேளைகளில் அந்த வரைவில் ஏதும் திருத்தங்களைச் செய்யக்கூடும். முடிவில் அந்த வரைவு மூன்றாவது வாசிப்பின் பின் வாக்கெடுப்புக்கு விடப்படும். அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுமிடத்து அது யாப்பில் இணைக்கப்படும். இப்போது இருக்கும் உத்தேச வரைபு அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டால் கோட்டாபய ராஜபக்ச ஓர் அரசன் ஆகிவிடுவார். ஒரு அரசனுக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான அதிகாரங்களை அவர் பெற்று விடுவார். இது ஏறக்குறைய 1978இல் ஜெயவர்த்தன இந்த யாப்பைக் கொண்டு வந்த பொழுது பெற்றிருந்த நிறைவேற்று அதிகாரங்களுக்கு நிகரானது. அப்பொழுது ஜெயவர்த்தன கூறினார் “ஒரு ஆணைப் பெண்ணாக்க முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்” என்று. ஆனால் அந்த அதிகாரங்களை வைத்துக் கொண்டு அவர் நாட்டை எங்கே கொண்டு வந்து நிறுத்தினார்?