20 ஆவது திருத்த நடைமுறையால் அதிகரிக்கும் எதிர்ப்பலைகள்!

இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது, தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19ஆவது திருத்தத்தின் மூலம் தான். ஏனெனில் 19ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிலிருந்து நீக்கியது. எனவே, கோட்டாபய தனது ராஜபக்ஷ வம்சத்தின் அடுத்த வாரிசாகப் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தது.

எந்த 19ஆவது திருத்தத்தின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததோ அதே 19ஆவது திருத்தத்தை இல்லாமலாக்கும் நோக்கத்தோடு அவர் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருகிறார்.

Advertisement

ஆனால், அந்த 20ஆவது திருத்தம் 19இற்கு மட்டும் அல்ல, அதைவிட ஆழமான பொருளில் அவருடைய தமையன் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிரானது என்று ஒரு விளக்கம் இப்பொழுது கூறப்படுகிறது.

இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் இப்பொழுது நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து 20ஆவது திருத்தத்திற்கு எதிராக அபிப்பிராயங்கள் திரண்டு வருவதன் பின்னணியில் மஹிந்தவும் இருக்கிறார் என்று தென்னிலங்கையில் பரவலாக ஓர் ஊகம் நிலவுகிறது.

20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கொவிட்-19 இரண்டாவது அலையைக் காரணங்காட்டி எதிர்க்கட்சிகளின் வெகுஜனப் போராட்டங்களை கோட்டாபய கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால், அதனையும் மீறி நீதிமன்றம் அவருடைய கனவுகளின் ஒரு பகுதியை முறியடிக்கும் விதத்தில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் 20ஆவது திருத்தத்திற்கு எதிரான அபிப்பிராயங்கள் மேலும் திரட்சியுற்று வருகின்றன. குறிப்பாக அமரபுர நிகாய, ராமன்ய நிகாய போன்ற பீடங்கள் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அவர்கள் 20ஆவது திருத்தம் நாட்டு மக்களை பழங்குடி நிலைக்குக் கொண்டு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அவ்வறிக்கையில் இலங்கைத் தீவுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது மேலும் ஒரு யாப்புத் திருத்தம் அல்ல ஒரு புதிய யாப்புத்தான் என்று மிகக் கூர்மையாகக் கூறப்படுள்ளது.

இவ்விரண்டு பீடங்களும் சிங்கள உயர் குழாத்தை அல்லது மேட்டுக்குடியை பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல. அவற்றின் எதிர்ப்பு சிங்களப் பொது சனத்தின் கூட்டு அபிப்பிராயத்தை முழுமையாகத் திரட்டப் போதுமானவை அல்ல. சிங்கள பௌத்த உயர் குழாத்தையும் மேட்டுக் குடியையும் பிரதிநிதித்துவப்படுததும் மல்வத்த பீடமும் அஸ்கிரிய பீடமும்தான் சிங்கள பொதுசன அபிப்பிராயத்தை பெருமளவுக்கு திரட்சியுறச் செய்யமுடியும்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபரில் மைத்திரிபால சிறிசேன யாப்பை கவிழ்த்தபோது இந்த இரண்டு பீடங்களும் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. மல்வத்து பீடாதிபதி மைத்திரியை சந்திப்பதைத் தவிர்த்தார். இது சிங்கள பௌத்த உளவியலை பெருமளவுக்கு தீர்மானித்தது. பின் வந்த நீதிமன்றத் தீர்ப்பிலும் இதன் தாக்கம் இருந்திருக்கும்.

இம்முறை 20ஆவது திருத்தத்துக்கு எதிராக இவ்விரண்டு பீடங்களும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகராகிய கருஜெயசூரிய ஊடாக அவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டி வருவதாக ஓர் அவதானிப்பு உண்டு.

இவை தவிர, இரண்டு பௌத்த பீடங்களின் எதிர்ப்பையடுத்து கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இரண்டு பௌத்த பீடங்களும் வலியுறுத்திய அதே விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, இலங்கைத் தீவுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு புதிய யாப்பே என்று.

இவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக அபிப்பிராயத் திரட்சி ஏற்பட்டு வருகிறது. இந்த அபிப்பிராயத் திரட்சி தன்னியல்பாக ஏற்படவில்லை என்றும் இதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷவே இருப்பதாகவும் ஒரு ஊகம் கொழும்பில் பரவலாகக் காணப்படுகிறது.

ஆனால், ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தரும் தகவல்களின்படி வெளியிலிருந்து பார்ப்பவர்கள் சிந்திப்பது போல ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையில் பூசல்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. மாறாக அவர்கள் இது விடயத்தை தங்களுக்கிடையே சுமூகமாகத் தீர்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, கோட்டபாய முன்வைத்த 20ஆவது திருத்தத்துக்குரிய சட்ட வரைபை மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எதிர்த்தார்கள். அதனால், அவர் அந்தத் திருத்தம் குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமித்தார். ஆனால், அந்த நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை கவனத்தில் எடுக்காமல் கோட்டாபய முன்வைத்த அதே உத்தேச சட்ட வரைபே தொடர்ந்தும் அரச வர்த்தமானியில் காணப்பட்டது.

அப்படியென்றால், மஹிந்த ராஜபக்ஷ நியமித்த நாடாளுமன்றக் குழுவை கோட்டாபய பொருட்படுத்தவில்லையா என்ற ஒரு கேள்வி எழுந்தது. எனினும், இவ்விடயத்தில் இரண்டு சகோதரர்களும் பிரச்சினையைத் தங்களுக்கிடையே சுமூகமாகத் தீர்த்துக் கொண்டதாகவே தோன்றியது. இப்பொழுதும் 20ஆவது திருத்தத்துக்கு எதிரான அபிப்பிராயத் திரட்சி ராஜபக்ஷ சகோதரர்களை ஒற்றுமைப்படுத்துமா?

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்பொழுது 78 வயது. இன்னும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருமளவுக்கு அவருடைய உடல்நிலையும் வயதும் இடம் கொடுக்குமா என்ற கேள்விகள் உண்டு. எனவே, அவரைப் பொறுத்தவரை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருவதை விடவும் தன் மகன் நாமலை எப்படி அந்தப் பதவியை நோக்கி நகர்த்தலாம் என்றே அவர் சிந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு, நாமலை எதிர்கால ஜனாதிபதியாகக் கட்டியெழுப்புவது என்றால் அதற்கு இப்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் ஆதரவும் பசில், சமல் ராஜபக்ஷக்களின் ஆதரவும் தேவை.

எனவே, வம்ச ஆட்சியைத் தொடர்வதென்றால் சகோதரர்கள் தங்களுக்கிடையே சுதாகரித்துக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்கப்படுகிறது. தொகுத்துப் பார்த்தால் இதுவிடயத்தில் ராஜபக்ஷ குடும்பம் தங்களுக்கிடையே பிணக்குகள் இன்றி அல்லது பிணக்குகளை வெளிக்காட்டாது பிரச்சினையை எப்படியாவது சுதாகரித்துக் கொள்ளும் என்றே நம்பப்படுகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை எனினும் கசிந்திருக்கும் செய்திகளின்படி உத்தேச சட்ட வரைவில் காணப்படும் நான்கு சரத்துக்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது, அதற்கும் அப்பால் பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரங்கள், ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்குரிய கால எல்லை, தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் ஆகிய நான்குமே அந்த சரத்துக்கள் ஆகும்.

ஒரு நாட்டின் ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு வலுவேறாக்கம் அவசியம். நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, நீதி பரிபாலனக் கட்டமைப்பு ஆகிய மூன்றும் தனித்தனியே சுயாதீனமாக இயங்க வேண்டும். ஆனால், உத்தேச 20ஆவது திருத்தச் சட்ட வரைபானது சட்டவாக்க மன்றத்தையும் நீதிப்பரிபாலன கட்டமைப்பையும் ஏனைய ஜனநாயக நிறுவனங்களையும் பெருமளவுக்கு நிறைவேற்று அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டவைகள் ஆக்க முயற்சிக்கிறது.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வலு வேறாக்கப் பொறிமுறை ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்படுகிறது. எனினும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் ஏனைய எல்லா சரத்துக்களிலும் நீதிமன்றம் தலையீடு செய்யவில்லை.

அவற்றில் கணிசமானவை ஏற்கனவே 18ஆவது திருத்தத்தின் கீழ் நடைமுறையில் இருந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது உச்ச நீதிமன்றத்தின் முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட முன்னரே சமூக வலைதளங்களில் எப்படிக் கசிந்தது? இது எதன் துர்குறி?

எனவே, திருத்தப்பட்ட சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொழுது அங்கே அதற்கு எதிர்ப்பு இருக்கும். ஆனால், யார் எதிர்ப்பைத் திரட்டுவது? ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்து கிடக்கிறது. முஸ்லிம் கட்சிகள் ஒருமித்த முடிவை எடுக்க முடியாதிருக்கின்றன. சிலவேளை, ரிசாட் பதியுதீன் விவகாரத்தில் அரசாங்கம் மேலும் இறுக்கிப் பிடித்தால் அது முஸ்லிம் பிரதிநிதிகளை ஐக்கியப்படுத்தக்கூடும்.

எனினும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதிர்தரப்பில் இருந்து பிரதிநிதிகளைக் கழற்றி எடுக்கும் வாய்ப்புக்களை அதிகப்படுத்தும் சரத்துக்களில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை. அதாவது, கோட்டாபய தனது அமைச்சரவையை விரும்பியபடி பெருப்பிக்கலாம். எனவே, அமைச்சுப் பதவி தருகிறோம், இணை அமைச்சுப் பதவி தருகிறோம் என்று கூறி எதிர்த்தரப்பில் இருந்து கழற்றக்கூடிய ஆட்களைக் கழற்ற முடியும். எனவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாகவே உள்ளன.

இப்படிப் பார்த்தால் 20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் சக்தி எதிர்க் கட்சிகளுக்கு உண்டா? நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒரு வெகுசன எதிர்ப்பலையைத் திரட்டக்கூடிய விதத்தில் எதிர்க் கட்சிகளோ அல்லது சிவில் சமூகங்களோ அல்லது மத அமைப்புகளோ பலமாக இல்லை.

அப்படிப் பலமாக இருந்திருந்தால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை காத்திருந்து அதன்பின் இரண்டு மகா சங்கங்கள் தமது எதிர்ப்பைக் காட்டி இருந்திருக்காது. ஆயர்களின் சம்மேளனமும் அப்படித்தான். மதத் தலைவர்களும் சிவில் சமூகங்களும் தமது எதிர்ப்பை நீதிமன்றத் தீர்ப்புக்கு முன் வலிமையாக வெளிக்காட்டி இருந்திருந்தால் அது சில சமயம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும்.

மைத்திரிபால சிறிசேனவின் யாப்புக் கவிழ்ப்பின் போது 2018இல் அதுதான் நடந்தது. ஆனால், அவ்வாறு எதிர்ப்பைப் பரவலான அளவில் காட்டுவதற்கு கொவிட்-19 மட்டும் தடையில்லை.

எதிர்க் கட்சிகளும் சிவில் கட்டமைப்புகளும் அரசாங்கத்தை எதிர்க்கும் ஒன்றிணைக்கப்பட்ட பலத்தோடு இல்லை என்பதே உண்மை. ஏனெனில் அரசாங்கம் பெற்ற வெற்றி அத்தகையது. அந்தப் பிரமாண்டமான வெற்றிக்கு முன் மத நிறுவனங்களும் சிவில் சமூகங்களும் ஒடுங்கிபோய் விட்டனவா?