யாழ் வர பணமின்றி சீதுவை பகுதியில் தவித்த இளம்பெண்களை மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்த சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம் வருவதற்கு பணமின்றி சீதுவை பகுதியில் தவித்த இளம்பெண்களை மனிதாபிமான அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த சாரதியும், நடத்துனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட பிராண்டிக்ஸ் தொழிலகத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 12 இளம்பெண்கள் ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டதாலும், கையிலிருந்த பணம் முடிந்ததாலும் யாழ்ப்பாணம் திரும்ப முடியாமல் தவித்தனர்.

அவர்கள் சீதுவை பேருந்து நிலையத்திற்கு வந்து, கொழும்பு- யாழ்ப்பாணம் பேருந்தில் ஏறியுள்ளனர். தம்மிடம் பணம் இல்லை, யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்ததும் பணத்தை தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பில் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு அறிவித்த நடத்துனர், பின்னர் பெண்களிற்கு பயணச்சீட்டு வழங்கினார்.

பருத்தித்துறையை சேர்ந்த 9 பேரும், நாவற்குழியை சேர்ந்த 2 பேரும், மிருசுவில் பகுதியை சேர்ந்த ஒருவர் என 12 யுவதிகள் யாழ் வந்துள்ளனர்.

இரவு 11.30 மணியவில் பேருந்துகள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தன. யாழ் மாநகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிசார் பேருந்து நிலையத்திற்கு வந்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

சாரதி, நடத்துனரை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தினர்.

இதேவேளை, பேருந்து யாழ் தரிப்பிடத்தை வந்தடைந்த போது, 12 யுவதிகளின் பெற்றோரும் அங்கு வந்து, அவர்களின் பயணச்சீட்டுக்குரிய பணத்தை செலுத்தியுள்ளனர்.

கொரோனா அபாயமுள்ள பகுதியில் நிர்க்கதியாக நின்ற இளம்பெண்களை யாழப்பாணத்திற்கு அழைத்து வந்த சாரதிக்கும், நடத்துனரிற்கும் அந்த பெண்களின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.