முல்லைத்தீவு தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 15 பேர் முதற்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

முல்லைத்தீவில் நேற்றைய தினம் இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 15 பேர் முதற்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மாவட்ட நிலவரம் தொடர்பாக இன்று மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் இருவர் கொரோனா தொற்றாளர்களாக முதன் முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் எமது மாவட்டத்தில் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்கி வந்தன. அந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் வேறு மாவட்டங்களிலிருந்து கொரோன தொற்றுடையவர்களுடன் பழகியவர்கள் என சந்தேகத்துக்கிடமானவர்கள் எடுத்துவரப்பட்டு அவர்கள் அங்கு இருக்கின்ற போது அவர்களுக்கு பி சிஆர் பரிசோதனை செய்த போது அவர்களுக்கு அங்கு தொற்று இனம் காணப்படுகின்ற போது, அங்கிருந்து அவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாங்கள் அதற்குரிய போக்குவரத்து சேவைகளை வழங்கி வந்தோம்.

இதன்போது எமது மாவட்டத்திழும் சில கொரோனா கொத்தணிகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றது சிலரை தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். அத்தகைய சந்தர்ப்பத்தில் நாங்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இவ்வாறு தனிமைப்படுத்தி வைத்திருந்தவர்களிடம் பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம்.

அவ்வாறு பரிசோதனை செய்தவர்களில் இருந்து நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் செய்து கொண்ட பரிசோதனை முடிவின்படி எமது மாவட்டத்தில் தனிமைப்படுத்தி இருந்த இருவர் தொற்றுடையவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் எமது மாவட்டத்தைப் பொறுத்தளவில் நாங்கள் முன்கூட்டியே அவர்களுக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட இருவரே தொற்றுடையவராக இனம்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 19ஆம் திகதியிலும் 21 ஆம் திகதிலும் கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று வந்திருக்கின்றனர். அந்தவகையில் 21 ஆம் திகதி திரும்புகிற போது பேலியாகொடை மீன்சந்தையில் கொரோனா கொத்தணி இனம்காணப்பட்ட நிலையில் அந்த செய்தியை நாங்கள் அறிந்து அவர்கள் இங்கு வர முன்னரே எமது அதிகாரிகளின் வினைத்திறனான சேவை ஊடாக அவர்களை தொடர்புகொண்டு அவர்கள் மாவட்டத்துக்கு வருகை தந்தவுடன் அவர்களை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் தனிமைப்படுத்தி இருந்தனர். அவ்வாறு தனிமைப்படுத்தியவர்களில் வாகன சாரதிக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த நபருடன் 19 ஆம் திகதி உதவியாளராகச் சென்ற ஒரு 25 வயது நிரம்பிய நபருக்கும் இந்த கொரோனா தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஆயினும் அடுத்த முறை (21ம் திகதி) வாகனத்தின் உதவியாளராக சென்ற அவருடைய தந்தையாருக்கு தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு மீண்டும் பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை உள்ளது.

இதே நேரத்தில் இவர்களுடன் சம்மந்தப்பட்ட அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த இருவர் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பி சி ஆர் பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்ற ரீதியில் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகியவர்கள் என்ற அடிப்படையில் கடந்த 19 ஆம் திகதிக்கு பின்னர் அவர்களுடன் நெருக்கமாக யாரும் இருந்ததாக அறியப்படவில்லை.

இருப்பினும் இன்று பத்து நாட்கள் கழிந்த பின்னரும் அவர்களுடன் சேர்ந்து பழகியவர்களுக்கும் இந்த கொரோனா தொடர்பான அறிகுறிகள் இல்லை. ஆனால் இந்த நோய் ஏற்பட்டாலும் எந்தவிதமான அறிகுறியும் காட்டாமல் பெருகி வருகின்ற காரணத்தினால் 14 நாட்கள் தாண்டும் வரை நாங்கள் யாருக்கும் தொற்று இல்லை என கூற முடியாத நிலை காணப்படுகின்றது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் நேற்றிரவு இந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக எமது சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக அவர்கள் நெருங்கி பழகியவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதல்கட்டமாக முதலாவது அவருடன் நெருங்கிய தொடர்புடைய முதலாவது தொடர்பாளர்கள் என்ற அடிப்படையில் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

ஏனைய மாவட்டங்களில் முதல் முறையாக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டவுடன் தொற்றாளர்கள் இனம் காணப்படுகின்ற போது அந்த கிராம சேவையாளர் பிரிவு அல்லது பிரதேசத்தையும் முடக்குவது ஆனால் நமது மாவட்டத்தில் அவ்வாறான ஒரு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை காரணம் ஏற்கனவே அவர்களை நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைத்திருந்தோம் இவர்களில் இருந்து ஏனையவர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு மிக்க குறைவு.

ஆயினும் 25 வயதுடைய தொற்றாளருடன் பத்து நாட்களுக்கு முன்னர் அவருடைய சகோதரி நெருங்கிப் பழகிய நிலையில் அவருக்கு தொற்று இருந்தால் அவர் ஒரு ஆடை தொழிற்சாலையில் பணி புரிகின்றார். எனவே அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தால் அங்கு பரவியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே அவருடைய பி சிஆர் பரிசோதனை செய்து இருக்கின்றோம். அவருடைய முடிவை கொண்டு அவருக்கு தொற்று இல்லை என்றால் அவருடன் பழகியவர்களை விடுவிக்க முடியும்.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டவர்கள் இன்றும் நாளையும் விடுமுறையில் இருப்பதனால் அவர்களுக்கு நாங்கள் ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறோம். அவருடன் நெருங்கிப் பழகியவர்களை அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் மீண்டும் வேலைக்கு வருவதற்கு முன்னர் இந்த நெருங்கிப் பழகிய சகோதரியை நாங்கள் சோதனைக்கு உட்படுத்திக் கொண்ட போது பெரும்பாலும் அவருக்குத்தொற்று இல்லை என்று வரும் என்று நம்புகின்றோம்.

அவர்களுக்கு தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை இயங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

இலங்கை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உடைய ஆய்வின் முடிவில் ஏற்கனவே இருந்த வைரசை விட தற்போது இருக்கின்ற வைரஸ் ஆனது வீரியம் கூடிய வைரஸ் ஆக இருப்பதால் இலகுவில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய ஆற்றல் உள்ளது என்ற காரணத்தினால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி நமது மாவட்டத்தையும் மக்களையும் பாதுகாக்க முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.