இலங்கையின் மிகப்பெரிய விபச்சார வலையமைப்பை இயக்கிய பெண்!

சில வாரங்களின் முன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், ஜினா மேடம் பற்றிய செய்திகள் நாட்டில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டது. ஜினா மேடத்தை சிலர் நினைவில் வைத்திருக்ககூடும். பலருக்கு அவரை தெரிந்திருக்காமலே இருந்திருக்கலாம்.

அவர்களிற்காக ஜினா மேடத்தின் கதையை தருகிறோம்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பை கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி தம்மிக கணேபொல அண்மையில் வழங்கினார். ஜினா மேடத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, தண்டனையை பத்து வருட காலத்திற்கு ஒத்திவைத்தார். 10 ஆண்டுகளுக்குள் மற்றொரு குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டால், பிரதிவாதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 500,000 ரூபா அபராதம் விதித்தார்.

Advertisement

ரோஸ்மேரி ஜூட் ஃபெலிசியா பெரேரா அல்லது ஜினா மேடம் ஒரு காலத்தில் இலங்கையின் முன்னணி விபச்சார வலையமைப்பை இயக்கியவர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள லிபர்ட்டி பிளாசா ஷொப்பிங் மோலின் ஏழாம் மற்றும் எட்டாவது மாடியில் பல அறைகளில் இயங்கிய விபச்சார விடுதியில் ஐந்து பெண்களை தடுத்து வைத்தது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு டிசம்பர் 4, 2010 அன்று சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஜினா மேடம், நாட்டின் செல்வந்தர்கள், சக்திமிக்கவர்கள் மற்றும் பிரபுக்களுக்கு விலை மாதர்களை விநியோகித்தவர். அவரது விபச்சார விடுதியில் பெண்கள் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மட்டுமல்ல, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் விற்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் பெண்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு பெண்களும் அங்கு விநியோகிக்கப்பட்டனர்.

கொழும்பில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதாகக் கூறி, நாட்டின் பல தொலைதூர கிராமங்களில் இருந்து யுவதிகள் அவரது விபச்சார விடுதிக்கு வந்திருந்தனர். வெளிநாட்டு பெண்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து அவரது விபச்சார விடுதியில் பணிபுரிந்தனர்.

விபச்சாரிகளிடம் வருபவர்கள் செலுத்தும் பணத்தில் 10 சதவீதத்தை ஜினா மேடம் பெற்றார். அத்துடன், அறை வாடகை கட்டணமாக ஒரு பகுதியை பெற்றார். லிபர்ட்டி பிளாசாவில் உள்ள பல அறைகளை அவர் வாடகைக்கு பெற்று பெரியளவிலான விபச்சார விடுதியை நடத்தினார். அதாவது, இலங்கையின் மிகப்பெரிய விபச்சார விடுதியாக ஜினா மேடம் லிபரட்டி பிளாசாவில் இயக்கிய இந்த விபச்சார விடுதியே இயங்கியது.

ஜினா மேடத்தின் விபச்சார விடுதியின் பிரமாண்டத்தை புரிந்து கொள்ள மேலுமொரு தகவல்- விபச்சார விடுதி அறைக்கட்டணமாக மாதாந்தம் 3 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான பணத்தை செலுத்தி வந்தார்.

பிரபுத்துவ மனிதர்களின் ஆதரவுடன், பொலிசாரின் சோதனையில்லாமல் பல ஆண்டுகளாக விபச்சார விடுதியை நடத்தி வந்தார்.

ஜினா மேடம் நீர்கொழும்பை சேர்ந்த பெண். அவர் கொழும்பிற்கு வந்தது ஒரு விலை மாதாக. பின்னர் வாடகை வீடொன்றை பெற்று, அங்கு தங்கியிருந்தபடி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அந்த நேரத்தில் எந்த பொலிஸ் அதிகாரியோ அல்லது பொறுப்பான தரப்போ, ஜினா மேடத்தின் மோசமான தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆர்வம் காட்டவில்லை, ஏனெனில் அவரது அதிகார, பிரபுத்துவ நபர்களுடனான தொடர்பு. ஒருமுறை அவரது விபச்சார விடுதியில் பொலிசார் சோதனைக்கு சென்றபோது, அப்போதைய பிரதியமைச்சர் ஒருவரை சந்தித்தனர்!

ஜினா மேடம் பல வருடங்களாக தடங்கலின்றி விபச்சார விடுதியை நடத்தி வந்தபோது, 2018ஆம் ஆண்டிலேயே முதலாவது சிக்கலை எதிர்கொண்டார். அப்போதைய பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய பொலிசார் ஒரு விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

2018 டிசம்பர் 4 அன்று ஜினா மேடத்தின் விபச்சார விடுதியை பொலிசார் குறிவைத்தனர். அதன்படி, இரண்டு பொலிசார் சிவில் உடையில் விபச்சார விடுதி வாடிக்கையாளர்கள் போல நுழைந்தனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பொலிஸ் அதிகாரிகளும் நுழையாத ஜினா மேடத்தின் விபச்சார விடுதி அன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் பொலிசாரால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஏனென்றால், எட்டாவது மாடியில் உள்ள ஒரு அறையிலிருந்து ஏழு விபச்சாரிகளுடன் பொலிசாரின் நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்த ஜினா மேடம் ஒரு இரகசிய வழியால் தப்பிவிட்டார். அன்று அவர் எப்படி தப்பித்தார் என்று போலீசாரால் இப்பொழுதும் நம்ப முடியவில்லை. இருப்பினும், இரண்டு உஸ்பெக்கிஸ்தான் பெண்கள் மற்றும் மூன்று இலங்கை பெண்களை அறைகளில் போலீசார் கைது செய்தனர். சிக்கிய இலங்கை பெண்கள் அனுராதபுரம், மகரகம மற்றும் களுத்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள்.

அன்று தப்பித்த ஜினா மேடம் , கொழும்பில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் அறையொன்றை வாடகைக்கு பெற்று பல நாட்கள் பதுங்கியிருந்தார். அந்த நேரத்தில், அவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றார். ஆனால் பொலிசார் அவருக்கு எதிராக தடைளை ஏற்படுத்தி, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் ஜினா மேடத்தை தேடி நடவடிக்கையில் ஈடுபட்டன. பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளும் இதில் இணைந்தனர். ரெய்டு நடந்த நாளிலிருந்து சுமார் ஒன்பது நாட்கள் மாறுவேடத்தில் இருந்த ஜினா, தனது சிகை அலங்காரத்தை மாற்றுவதற்காக கொழும்பில் உள்ள ஒரு முன்னணி சிகையலங்கார நிலையத்தை நாடினார்.

அதன்படி, குறிப்பிட்ட நாளில் சிகையலங்கார நிபுணரை ஜினா பார்வையிட இருப்பதாக ஒரு பொலிஸ் உளவாளிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, புலனாய்வாளர் குழு சம்பவ இடத்திற்கு சென்று ஜினா மேடத்தை கைது செய்தது. ஆனால் அவர் விபச்சார விடுதி நடத்துவதில்லை என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவரால் தப்ப முடியவில்லை.

அதன்படி, மேடம் ஜினா கைது செய்யப்பட்டார்.

கைதான போது 64 வயதானவராக இருந்த ஜினா மேடம், பல்வேறு வருத்தங்களை காரணம் காட்டி தப்பிக்க முயன்றார். ஆனால் அது குடியவில்லை.