இளம் தொழில் முனைவோருக்கு காணி தருமா அரசாங்கம்?

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரச தொழில் முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கூடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த மாதம் 31ஆம் திகதி என்று முன்பு அறிவிக்கப்பட்டது. எனினும், அது பின்னர் பதினைந்தாம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

மேற்படி, அறிவிப்புத் தொடர்பாக பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் முதலில் வாய் திறக்கவில்லை. விண்ணப்பத் திகதி முடிவடையும் தறுவாயில்தான் சில அறிக்கைகள் வெளி வந்தன.

Advertisement

குறிப்பாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார். தவிர, ஏனைய சில அரசியல்வாதிகளும் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்கள். எனினும், இது தொடர்பில் தமிழில் உள்ள முக்கியமான கட்சிகள் தமது நிலைப்பாட்டை விளக்கமாகவும் கூர்மையாகவும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பில் இரண்டு விடயங்கள் சம்பந்தப்படுகின்றன. முதலாவது, காணி உடமை பற்றிய விடயம். அதை இன்னும் ஆழமாகச் சொன்னால் தாய் நிலத்தின் மீதான சட்ட பூர்வமான உரிமையைப் பாதுகாக்கும் விடயம்.

இரண்டாவது, தொழில் முனைவு நாட்டம். அதாவது, தமிழ் இளையோரிடம் எந்த அளவுக்கு தொழில் முனைவு நாட்டம் காணப்படுகிறது என்பதாகும்.

முதலாவதாகக் கூறப்பட்ட காணி உரித்து பற்றிய விடயமானது அரசாங்கத்தின் அறிவிப்பில் உள்நோக்கங்கள் இருக்கலாம் என்று ஒரு பகுதி தமிழ் அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். கிழக்கில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பதில் ஆர்வமாக காட்டும் ஓர் அரசாங்கம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு காணி வழங்கும் விடயத்தில் உண்மையாக இருக்குமா என்ற கேள்வி உண்டு.

இதுவிடயத்தில், தமிழ் மக்கள் போதிய அளவு விண்ணப்பிக்கா விட்டால் காணித் துண்டுகளை தமிழ் மக்கள் அல்லாத வேறு சமூகங்களுக்கு அரசாங்கம் வழங்கக்கூடும். அதாவது, அரசின் அனுசரணையோடான குடியேற்றத் திட்டங்களுக்கு இதைப் பயன்படுத்தக் கூடும் என்று ஒரு ஊகம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.

இதுகாரணமாக காணித் துண்டுகளுக்காக விண்ணப்பிக்குமாறு தமிழ் இளையோரை ஒருங்கிணைத்து ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டு என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால், எத்தனை தமிழ் பிரதிநிதிகள் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்பட்டிருக்கிறார்கள்?

அதேசமயம், இவ்வாறு அரசு நிலத்தை பிரஜைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் எனப்படுவது இலங்கை வரலாற்றில் புதியது அல்ல. ஏற்கனவே, ஆயுதப் போருக்கு முன்பு மத்திய தர வகுப்பினருக்கு காணி வழங்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மணலாறு பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு வழங்கபட்ட பல ஏக்கர் காணிகளில் தமிழ் தொழில் முனைவோர் பெரும் பண்ணைகளை உருவாக்கியதும் சுட்டிக் காட்டப்படுகிறது. கென் ஃபார்ம், டொலர் ஃபார்ம் போன்றவை அவ்வாறு உருவாக்கப்பட்ட பண்ணைகளே.

ஆனால், அந்தப் பண்ணைகள் எல்லாவற்றையும் ஆயுதப் போராட்ட கால கட்டத்தில் படைத் தரப்பு ஆக்கிரமித்தது. பின்னாளில் அவை யாவும் அரசின் அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றத் திட்டங்களாக மாற்றப்பட்டு விட்டன. அதன் பூர்வ குடிகளான தமிழ் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டு விட்டார்கள். இந்த முன்னுதாரணத்தை மனதில் வைத்தே தமிழ் மக்கள் காணி விவகாரங்களைக் கையாள வேண்டும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

இப்படிப்பட்ட அனுபவத்தின் பின்னணியில் அரச காணிகளை தமிழ் தொழில் முனைவோர் எப்படித் தங்களுடையதாக்கிக் கொள்ளலாம் என்பதற்கு பொருத்தமான தீர்க்கதரிசனம் மிக்க திட்டங்களை வகுத்து தமிழ் தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு. ஆனால், எத்தனை பேர் அதை செவ்வனே செய்திருக்கிறார்கள்? இது முதலாவது.

இரண்டாவது, தமிழ் இளையோர் மத்தியில் தொழில் முனைவு நாட்டம் உண்டா என்பதாகும். அரசாங்கம் காணித் துண்டுகளை வழங்க முன்வரும் பொழுது அதைப் பயன்படுத்தி காணிகளை வாங்கி அதில் புதிய தொழில் துறைகளை தொடங்க எத்தனை இளையோர் தயார் என்ற கேள்வி இங்கு முக்கியமாகும்.

யாழ். குடா நாட்டின் வலிகாமம் பகுதியின் எல்லைப் பிரதேசத்தில் பங்குத் தந்தையாக இருந்த ஒரு மதகுரு என்னிடம் சொன்னார், ‘அதிகம் விவசாய நிலங்களைக் கொண்ட ஒரு பகுதி அது. அதில் ஒரு பகுதி படை முகாமுக்குள் சென்றுவிட்டது. எனினும், எஞ்சியிருக்கும் பகுதியில் விவசாயம் செய்வதில் இளம் தலைமுறை பெருமளவுக்கு நாட்டம் காட்டுவதில்லை.

அந்தப் பகுதியில் பெருமளவுக்கு முதியோர்தான் விவசாயம் செய்கிறார்கள். இளையோர் படிக்கிறார்கள். ஆனால், படிப்பை முழுமையாக முடிப்பதில்லை. ஒரு கட்டத்தில் படிப்பைக் கைவிட்டு லீசிங் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். ஆனால், அதிலும் உழைக்க முடியாமல் கடைசியில் அங்கேயும் நட்டப்பட்டு வாகனத்தையும் பறிகொடுத்து வீதிக்கு வருகிறார்கள்.

அதன்பின்னர், விவசாயத்திலும் நாட்டமில்லை. வேறு தொழில்களிலும் நாட்டமில்லை. கைப்பேசியும் மோட்டார் சைக்கிளுமாக உதிரிகளாக தெருவுக்கு வருகிறார்கள்’ என்று கூறினார்.

விவசாயத்தில் மட்டுமல்லாது சாதாரண கூலித் தொழில் செய்வதற்கும் கூட பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. ஒரு கூலித் தொழிலாளிக்கு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ரூபாய் கிடைக்கிறது. அதுவும் எட்டு மணித்தியாலங்களுக்கு பல கிராமங்களில் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. ஆனால், சந்திகளில் மக்கள் கூடும் இடங்களில் இளையோர் வீணாக பொழுதைப் போக்குகிறார்கள்.

ஒரு வாகனம் திருத்துபவர் சொன்னார், ‘வேலை பழக பலர் வருகிறார்கள். இரண்டு நட்டுக்களைக் கழட்டியபின் முதலாளியாக வர யோசிக்கிறார்கள்’ என்று. வாகனங்களுக்கு வயரிங் செய்யும் ஒருவர் சொன்னார், ‘தொழில் பழக வருபவர்கள் நின்று பிடிக்கிறார்கள் இல்லை. எப்படி குறுக்கு வழியில் தொழிலைப் பழகலாம், எப்படி வேகமாக முதலாளியாக வரலாம் என சிந்திக்கிறார்கள்.

தொழிலை முறையாக ஒரு தவமாக பழகாமல் எப்படி குறுக்கு வழியில் முதலாளியாக வரலாம் என்று சிந்திப்பவர்கள் அதிகம். அதனால், அவர்கள் முறையாகத் தொழிலைக் கற்கத் தயாரில்லை. தொழிலாளியாக இருந்துதான் முதலாளி ஆகலாம். ஆனால், தொழிலாளியாக இராமல் எப்படி முதலாளியாக வரலாம் என்றே பலரும் யோசிக்கிறார்கள்’ என்றார்.

இது ஏனைய தொழில் துறைகளுக்கும் பொருந்தும் என்று அவதானிக்கப்பட்டுள்ளது. மாணவராக இல்லாமல் எப்படி ஆசிரியராக வருவது, தொண்டராக இல்லாமல் எப்படி தலைவராக வருவது என்று சிந்திக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது.

தமிழ் பகுதிகளில் இப்பொழுதும் வீடு கட்டும் பொழுது மாபிள் பதிப்பது போன்ற நுட்பமான வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிது. உரிய தொழில் வல்லுனர்கள் சிங்களப் பகுதிகளில் இருந்துதான் வரவேண்டும் என்று ஒரு பலமான கருத்து நிலவுகிறது. இதுபோன்ற விடயங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழில் வல்லுனர்கள் தமிழ் பகுதிகளில் குறைவு என்றும் கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் தொழில் முனைவோருக்கு காணிகள் என்று வரும் பொழுது என்ன தொழில் செய்வது? அதை எப்படி கற்பனை பண்ணி கஷ்டப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் செல்வது? அல்லது எல்லாருமே விவசாயம்தானா போன்றவை தொடர்பாக இளையோரை ஊக்குவித்து ஆற்றுப்படுத்தி ஒருங்கிணைத்து வழிகாட்ட எத்தனை அரசியல்வாதிகள் தயாராகக் காணப்படுகிறார்கள்?

அல்லது, இன்னும் கூராகக் கேட்டால் எத்தனை அரசியல்வாதிகள் இளையோருக்கு வழிகாட்டும் முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்? தொண்டராக வராமல் எப்படித் தலைவராக வருவது என்று சிந்திக்கும் அரசியல்வாதிகளால் தமது சமூகத்தின் இளையோரை தொழில் முனைவோர்களாக மாற்ற முடியுமா?

எனவே, அரசாங்கத்தின் காணி வழங்கும் திட்டத்தின் பின்னால் எத்தகைய சூதான உள்நோக்கங்கள் இருந்தாலும் அதைத் தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தின் மீதான உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கு நிலையிலிருந்து வெற்றிகரமாகக் கையாள முடியும். ஆனால், அதற்கு தீர்க்கதரிசனம் மிக்க பொருத்தமான அபிவிருத்தி தரிசனங்களை கொண்ட தமிழ் தலைவர்கள் வேண்டும்.