80 வயதான இந்த தாயார்தான் புலிகளை மீளுருவாக்க போகிறாரா? சுமந்திரன் நீதிமன்றத்தில் அதிரடி கேள்வி

80 வயதான இந்த தாயார்தான் விடடுதலைப் புலிகளை மீளுருவாக்கப் போகிறார் என சொல்கிறீர்களா? இவர் விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்து, புலிக்கொடி ஏற்றித்தான் தனது மகனை நினைவுகூரப் போகிறாரா? என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பினார் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடையேற்படுத்தக்கூடாதென வடக்கு பிரதிப்பொலிஸ்மா அதிபர், வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கட்டளையிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று (20) யாழ் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது, சுமந்திரன் இந்த கேள்வியை எழுப்பினார்.

Advertisement

இந்த வழக்கை விசாரிக்க யாழ் மேல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரானவர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி சார்பில் முன்னிலையான பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம், புலிகள் மீளுருவாக்க முயற்சிகள் நடக்கிறது என நீண்ட சமர்ப்பணம் முன்வைத்தார்.

பின்னர் மனுதாரர்கள் தரப்பில் சமர்ப்பணம் முன்வைத்த எம்.ஏ.சுமந்திரன்- யுத்தம் முடிந்த 10 வருடங்களின் பின்னரும் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என சுட்டிக்காட்டினார். புலிகளின் மீளுருவாக்கம் பற்றி கதைக்கும் தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள், இங்கே அதைப்பற்றி நீண்டநேரம் பேசிக்கொண்டிருக்கிறார். இது சாதாரண குடிமகன் என்றால் நீதிமன்ற வாசலிலேயே கைது செய்யப்பட்டிருப்பார் என்றார்.

அத்துடன், மனுதாரர்களில் ஒருவரான கப்டன் பண்டிதரின் தாயாரை மன்றில் எழுந்து நிற்கும்படி சுமந்திரன் கேட்டுக் கொண்டார். 80 வயது மூதாட்டியான அவர் எழுந்து நிற்க, அவரை சுட்டிக்காட்டி- 80 வயதான இந்த தாயார்தான் விடடுதலைப் புலிகளை மீளுருவாக்கப் போகிறார் என சொல்கிறீர்களா? இவர் விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்து, புலிக்கொடி ஏற்றித்தான் தனது மகனை நினைவுகூரப் போகிறாரா? என கேள்வியெழுப்பினார்.

அத்துடன், மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் என்றும் குறிப்பிட்டார்.