கோவில் வளாகத்தில் உறவினர்களால் கட்டி வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட இளைஞன்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கோவில் வளாகத்தில் உறவினர்களால் கட்டி வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் 38 வயதான பவன் குமார்.

இவரையே மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் உறவினர்கள் கட்டிவைத்து உயிருடன் எரித்துள்ளனர்.

Advertisement

பவன் குமார் அல்வால் பகுதியை சேர்ந்தவர். பெங்களூருவில் பணியாற்றி வந்த இவரை, இவரது மைத்துனரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு அழைத்துள்ளனர்.

இதனையடுத்து பவன் குமார் தனது மனைவி கிருஷ்ணவேனியுடன் பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார்.

சுமார் 12 நாட்களுக்கு முன்னரே பவன் குமாரின் மைத்துனர் ஜெகன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த நிலையில், திங்களன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் இருந்து ஒரு ஆணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவில் வளாகம் நோக்கி விரைந்துள்ளனர்.

அங்கே, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அறை ஒன்று பூட்டப்பட்ட நிலையில், கரும்புகையும் மாமிசம் கருகும் வாசனையும் வந்துள்ளது.

கிராம மக்கள் உடனடியாக அந்த அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

நாற்காலி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில், மொத்தமாக எரிந்த ஆணின் சடலம் அங்கே கண்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், எரித்துக் கொல்லப்பட்ட பவன் குமாரின் மனைவி கிருஷ்ணவேணி, தமது சகோதரரின் விதவை தம்மை தண்ணீர் வாங்கிவர அனுப்பியதாகவும், அதன் பின்னர் தமக்கு என்ன நடந்தது என்று தெரியாது எனவும் கூறியுள்ளார்.

பவன் குமாரை அவரது மைத்துனரின் குடும்பம் அறைக்குள் கட்டிவைத்து, பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகவே தெரிய வந்துள்ளது.

மேலும், பவன் குமாரை யார் தீயிட்டு கொளுத்தினார்கள் என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாரடைப்பால் மரணமடைந்த ஜெகனுக்கும் பவன் குமாருக்கும் கருத்துவேறுபாடு இருந்ததாகவும்,

அவர் மரணமடைய பவன் குமார் மந்திரவாதம் செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் நம்புவதாகவும் கிருஷ்ணவேணி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.