திருப்பதி அடுத்த பீலேரு கலிகிரி பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு லேசான காய்ச்சல் இருந்தது. இதனால் கலிகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மூதாட்டியின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் மூதாட்டிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல் வந்தது.
Advertisement
இதனை பார்த்து மூதாட்டி அதிர்ச்சி அடைந்து திடீரென கீழே விழுந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் மற்றும் மகன் உடனடியாக அவரை மீட்டு கலிகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பீலேரு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.