தொடர்கதையாகும் சிறை வன்முறைகள்!

தென் அமெரிக்க நாடுகள் போதைப்பொருள் குற்றங்களுக்கு பெயர்பெற்றவை. அதுபோலவே, அங்குள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கலவரங்கள் இடம்பெறுவதும் வழக்கம்.

சிறைக் கைதிகள், போராட்டம் நடத்துவார்கள், சிறையை உடைத்துக் கொண்டு தப்பிச் செல்வார்கள். இவ்வாறான சம்பவங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கூட மரணமடைவார்கள்.

கொலம்பியா, பிரேசில், வெனிசுவேலா, பனாமா, சிலி, ஆஜென்ரீனா, பெரு போன்ற தென்அமெரிக்க நாடுகளில் சிறைக் கலவரம் இடம்பெறவில்லை என்றால் தான் ஆச்சரியம். இலங்கையும் அதுபோன்ற நிலைமையை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertisement

1983ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியில் வெலிக்கடைச் சிறையில், இரண்டு நாட்கள் தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

பின்னர், சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் களுத்துறைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை இடம்பெற்றது. அதே அரசாங்கத்தில், பிந்துணுவெவ தடுப்பு முகாமிலும், தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவையனைத்தும் – சிறைக் கலவரங்கள் என்பதை விட, தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட படுகொலைகள் என்று கூறுவதே சரியானது. 2012ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தற்போதைய அரசாங்கத்தில், அனுராதபுர சிறைச்சாலையிலும், இப்போது மஹர சிறைச்சாலையிலும் வன்முறைகள் நடந்திருக்கின்றன. இவை அனைத்தும் கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட குழப்பங்களை அடுத்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை நிகழ்ந்தபோது, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். தெரிவு செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என்று அவர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. எனினும் எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை.

இப்போது, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு சிறைக்கலவரம் நடந்திருக்கிறது. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை எவ்வாறு அடக்கப்பட்டதோ, அதுபோலவே, ஒரு இரத்தக் களரியுடன் தான் இதுவும் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

வெலிக்கடைச் சிறைச்சாலைக் கலவரம் ஆரம்பித்த விதமும் மகர சிறைச்சாலையில் வன்முறைகள் தொடங்கிய விதமும் வெவ்வேறானவை. மஹர சிறைச்சாலைக்குள் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கிய பின்னர் தான் கைதிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 183 கைதிகளுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, பதற்றத்தில் கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

மிக நெருக்கமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மத்தியில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால் இந்தக் கலவரம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான், இதே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கின. இதையடுத்தே வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஷானி அபேசேகர தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பலருக்கு எதிரான வழக்குகளை தீவிரமாக விசாரித்து வந்தவர். அவர்களில் பலர் சிறைக்குச் செல்வதற்கும் காரணமானவர். அப்போது விசாரணைகளில் அவருக்கு ஒத்துழைத்த பலர், இப்போது குத்துக்கரணம் அடிக்கிறார்கள்.

இதனால் ஷானி அபேசேகரவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஏதாவது ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் குரல் எழுப்பியிருந்தார்கள். அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தான், மஹர சிறைச்சாலையில் வன்முறைகள் துப்பாக்கிச் சூடுகள் நடந்திருக்கின்றன.

கொரோனா தொற்று அச்சம், கைதிகள் மத்தியில் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவங்களுக்கு கைதிகள் மீது பழியைக் போட்டுத் தப்பிக் கொள்வதற்கு அரசாங்கம் முந்திக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச, கைதிகளுக்கு போதைப்பொருள் மாத்திரைகள் கொடுக்கப்பட்டே வன்முறையில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று கூறியிருக்கிறார்.

ஜனாதிபதிக்கு சர்வதேச ரீதியாக அவப்பெயரை ஏற்படுத்தும் சதி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். கைதிகளுக்கு போதை மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருந்த கதை உண்மையான இருந்தால், அதற்கு பொறுப்பு போதைப்பொருள் கும்பல்களா அல்லது கைதிகளா?

இல்லை, கைதிகளுக்கு பொதைப்பொருள் கிடைப்பதை தடுத்திருக்க வேண்டிய சிறை நிர்வாகம் மற்றும் அதனை ஒழுங்காக வழிநடத்த தவறிய அரசாங்கமா? ஒரு அமைச்சரே, கைதிகளுக்கு போதை மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வன்முறைகளில் ஈடுபடும் நிலை ஏற்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.

இங்கு அவர் ஜனாதிபதியைக் காப்பாற்ற முயன்று மல்லாந்து படுத்துக் கொண்டே எச்சிலை துப்பியிருக்கிறார். ஏனென்றால், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டியது அரசாங்கம் தான். அதுவும் ஜனாதிபதியே இந்த விடயத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர். அவரிடம் தான் பாதுகாப்பு அமைச்சு இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பை மாத்திரமன்றி, சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் அவர் உறுதிப்படுத்த வேண்டியவர். சிறைக்குள் உள்ள கைதிகள் என்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்ற கருத முடியாது. முன்னைய அரசாங்கம், அவ்வாறு சிறைக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியிருந்தால், அரசாங்கத்தில் உள்ள பலர் இப்போது பாராளுமன்றத்தில் பேசக்கூடிய நிலை இருந்திருக்காது.

இப்போதைய அரசாங்கத்துக்கும் அதே பொறுப்பு இருக்கிறது. ஆனால் கைதிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு விடயத்தில், இந்த அரசாங்கம் எந்தளவு சிரத்தையைக் காண்பித்தது என்பதில் கேள்வி இருக்கிறது.

போதைப்பொருள் கும்பல்களை ஒழிப்பதாக கூறி, சிறைச்சாலைகளில் இருந்த பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டன. விசேட அதிரடிப்படையினரிடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டது. புலனாய்வு பிரிவினர் சிறைக்குள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தினர்.

ஆக முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறியிருந்த நிலையில் தான், இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அண்மையில் ஜனாதிபதி தனது முதலாவது ஆண்டு நிறைவு உரையில் கூட, நாட்டைப் பாதுகாக்குமாறு தன்னிடம் சிங்கள மக்கள் கேட்டுக் கொண்டார்கள் என்றும், அவர்கள் எதிர்பார்த்தபடி நாட்டைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன என்றும் கூறியிருந்தார்.

அவ்வாறாயின், மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் இந்த நாட்டவர்கள் இல்லையா? அவர்களின் பாதுகாப்பை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாமல் போனது ஏன்? ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாப்பதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்னவாயிற்று? சிறைக்கலவரங்கள் குறித்து இனி விசாரணைகள் நடக்கும். வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும். ஆனாலும், இறந்தவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை. இதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறப் போவதுமில்லை.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது என்பது சிறைகளில் கலவரங்கள், வன்முறைகள் குழப்பங்கள் ஏற்படாமல் நிர்வாகம் நடத்துவதே தவிர, கலவரங்களை் ஏற்பட்ட பின்னர் அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதல்ல.

இதனை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ள விதம் வேறு மாதிரியாகவே தெரிகிறது.