மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் கல்குடாத் தொகுதியிலுள்ள சில வீதிகள், தாழ் நில பிரதேசங்கள், குடியிருப்புக்கள் என்பன நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பாலான தாழ் நில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், சில இடங்களில் குடியிருப்புக்குள் நீர் புகுந்துள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 58 குடும்பம் நூற்றி எண்பத்தி எட்டு நபர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து இடம்பெயர்ந்து தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்து வாழ்வதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

Advertisement

அத்தோடு வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை எந்தவித இடம்பெயர்வுகளும் இடம்பெறவில்லை என்று செயலக அனர்த்த சேவைகள் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகர் 142.4 மில்லி மீற்றர், நவகிரி 68.1 மில்லி மீற்றர்,தும்பங்கேணி 44.1 மில்லி மீற்றர், மயிலம்பாவெளி 111.2 மில்லி மீற்றர், பாசிக்குடா 40.0 மில்லி மீற்றர், கிரான் 82.3 மில்லி மீற்றர், உன்னிச்சை 28.5 மில்லி மீற்றர், வாகனேரி 78.2 மில்லி மீற்றர், கட்டுமுறிவு 19.0 மில்லி மீற்றர், உறுகாமம் 36.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிகள் என்பன பதிவு செய்யப்பட்டுள்ளது.