இன்று ஈழத் தமிழினத்திற்கு உடனடியாக தேவைப்படுவது எல்லா வகையிலும் ஐக்கியமாகும்!

இன்று ஈழத் தமிழினத்திற்கு உடனடியாக தேவைப்படுவது எல்லா வகையிலும் ஐக்கியமாகும். தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலுள்ள தமிழ் மக்களுக்கும், தமிழ் தலைமைகளும் அனைத்து வகையிலும் தேவைப்படுவது “ஐக்கியம்” என்ற ஒரேயொரு தாரக மந்திரம் ஆகும் என தி.திபாகரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அந்த கட்டுரையில் மேலும்,

அந்த ஐக்கியத்தின் ஊடாகவே இனப்படுகொலைக்கு எதிரான நீதி கோரி, சர்வதேச அரசியல் அரங்கிலும், உள்நாட்டு அரங்கிலும் ராஜதந்திர ரீதியில் அறிவார்ந்த வகையில் அதிகம் புத்தி பூர்வமாக முன்னெடுக்க முடியும்.

Advertisement

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழர்களுக்கு தாங்கொணாத் துயரத்தையும், பேரிழப்பையும் தந்திருக்கிறது என்பது நாடறிந்த, ஊரறிந்த, உலகறிந்த உண்மையாகும்.

அதேவேளை எதிரி மேற்கொண்ட இனவழிப்பு என்பது இன்னொரு வகையில் தமிழினத்தின் தேசிய அபிலாசை வென்றெடுப்பதற்கான சாதகமான சர்வதேச அரசியல் கதவையும் திறந்து விட்டுள்ளது.

இப்பேரவலத்தின் விளைவிலிருந்து தமிழ் மக்களைக் காக்க ஏதுவான சர்வதேசச் சூழலும் முன்பு எப்போதையும்விடத் தற்போது அதிகம் சாதகமாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில் சர்வதேச ரீதியில் இனப்படுகொலைக்கான நீதி கோரிய போராட்டத்துக்கு மிகப் புத்தி பூர்வமாகச் சர்வதேச ரீதியில் காய்களை நகர்த்த வேண்டியது அவசியமானதாகும்.

கடந்த வாரம் தாயகத்தில் மூன்று தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தனர். இது தமிழர் அரசியலில் ஒரு நற்சகுணம் தான்.

எனினும் அந்த அறிக்கை என்பது பெருமளவிற்கு அமையவல்லது. அந்த அறிக்கையானது அரசுகளின் நல்லாதரவின்றி நடைமுறை வடிவம் பெறுவது இயலாத காரியமாகும். எனவே அறிக்கை சமர்ப்பித்ததுடன் தமிழ் தலைவர்கள் தங்கள் கடமை முடிந்துவிட்டதென நின்றுவிட முடியாது.

இனிமேல்தான் அவர்கள் அதிகம் ராஜேந்திர ரீதியில் மிகவும் புத்தி பூர்வமாகச் செயற்பட வேண்டியுள்ளது.

ஐ.நாவின் மனித உரிமை ஆணையகம் கடந்த 11 ஆண்டு காலமாகத் தமிழினப்படுகொலைக்கு எதிராக ஒரு காத்திரமான, செயல் பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை என்ற கவலை தமிழ்மக்களுக்கு உண்டு.

நீதிநெறி முறையில் சர்வதேச நிறுவனங்கள் பற்றி உலகளாவிய நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினை அணுகப்படவில்லை என்ற ஆதங்கமும் தமிழ் மக்களுக்கு உண்டு என்ற விடயத்தையும் இந்த அறிக்கையில் தமிழ் தலைவர்கள் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.

இந்த வாரம் ஐ.நா மனித உரிமை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் “தமிழ் சிறுபான்மையினர்” என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டதாக தமிழர் தரப்பில் பலரும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

உலகளாவிய அரசுகளும் நிறுவனங்களும் ஈழத் தமிழரை “தமிழ் சிறுபான்மையினர்” என்று தான் அழைத்து வருகின்றன.

அதை அவர்களுடைய நோக்கு நிலையிலிருந்து பார்க்கவேண்டுமே தவிர தமிழர் நோக்கு நிலையிலிருந்து அல்ல என்ற நடப்பு நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைச் சிறுபான்மையினர் என்றுதான் இந்தியாவும் சரி, உலகமும் சரி அழைக்கின்றன.

ஆனால் பாகிஸ்தானின் சனத்தொகைக்கு நிகரானது இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சனத்தொகை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சிறுபான்மையினர் எனப் பன்னாட்டு நிறுவனங்களின் சொல்லாடல்கள் பற்றி எமக்கு இடையே நாம் துண்டு பட்டு மோதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

இந்நிலையில் காணப்படும் சூழலிலிருந்து கோரிக்கைகளை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுக்க வழி தேட வேண்டுமே தவிர அதற்குள் சிக்குண்டு சொற்சிலம்பம் ஆடி எம்மை நாமே மூழ்கடித்து விடக்கூடாது.

ஈழத்தமிழர்கள் தம்மை “ஒரு தேசம்”, “ஒருமக்கள்” என்று ஸ்தாபிப்பதற்கான பயணம் சர்வதேச அரங்கில் அதிகம் நீளமானது.அதனைப் படிப்படியாக, தொடர்ச்சியாக முன்னெடுத்து நிறுவ வேண்டுமே தவிர காணப்படும் குறைந்தபட்ச வாய்ப்புக்களை நாங்கள் பயன்படுத்தத் தவறக்கூடாது.

பன்னாட்டு நிறுவனங்களினதும், அரசுகளினதும் அறிக்கைகளில் தமிழினப்படுகொலைக்கு “இனப்படுகொலை” (Genocide) என்ற பதம் உடனடியாகப் பயன்படுத்தப்படமாட்டாது.

அவர்கள் மிஞ்சி மிஞ்சிப்போனால் “மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்” என்றே பயன்படுத்துவார்கள். இது உலகளாவிய நடைமுறை. இனப்படுகொலை என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அதனை “Gonocide” என்று அவர்கள் பயன்படுத்துவார்கள்.

அவ்வாறு பயன்படுத்துவதை அரசுகளும், நிறுவனங்களும் தமது சர்வதேச ஒழுங்கு முறைகளுக்குப் பாதகமானது என்ற நிலைப்பாட்டையே முன்னெடுத்துவர்.

அத்தோடு இனப்படுகொலை என்பது நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே “இனப்படுகொலை” பதப் பிரயோகத்தை மேற்கொள்வர். அவ்வாறே “தேசம்”, “தேசிய இனம்”, “மக்கள்”, என்ற நிலைக்கு முன்னேறுவதற்குத் தயாராகுவர்.

அதேவேளை தமிழ் மக்கள் தம்மை “ஒரு தேசம்” என்றும் “ஒரு மக்கள்” என்றும் அந்தஸ்துக்கு உயர்த்தும் பணியை இடையறாது முன்னெடுக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

அத்துடன் குறைந்தபட்ச வாய்ப்பான விடயங்களை ஏதுவாகக் கொண்டு தமிழ் மக்கள் தமது தேசிய அந்தஸ்தைப் புத்திசாலித்தனமாக உயர்த்த வேண்டுமே தவிர மேற்சட்டை வேண்டுமென்பதற்காக இருக்கும் கோவணத்தையும் கழட்டி எறிந்திடக் கூடாது.

எனவே ஈழத்தமிழினம் “தேசம்”, “மக்கள்” என்ற நிலையை அடைவதற்குச் சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் மிகப் புத்தி சாதுரியத்துடன் நடைமுறை சார்ந்து அதிகம் தந்திரமாகக் காய்களை நகர்த்த வேண்டியது அவசியமானதாகும்.

அத்தகைய சூழலில் தமிழ் தரப்பினர் எதிரிகளைச் சம்பாதிப்பதா? நண்பர்களை உருவாக்குவதா? என்பதை முதலில் சிந்தித்து முடிவெடுப்பது அவசியமானதாகிறது.

சேம் சைட் கோல் (Same side goal) அடித்து எதிரியை வெல்ல வைப்பதா? அல்லது வடக்கில் இருக்கும் கோல் போஸ்ட் நோக்கி பந்தை அடிப்பதற்கு தெற்கு நோக்கி பந்தை நகர்த்தி தந்திரமாகப் பின்பு வடக்கே “கோல்” கோல் அடித்து வெற்றி ஈட்டுவதா சரியானது என்ற முடிவுக்கு வரவேண்டும்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளில் பெரும்பாலானவற்றை தம் பக்கம் திருப்புவதில் சிங்களப் பேரினவாதம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு பெரு வல்லரசுகளையோ அல்லது பிராந்திய வல்லரசுகளையோ இலக்காகக் கொண்டு அவற்றை வென்றெடுப்பதற்காகச் செயற்படுவது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும்.

இந்நிலையில் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் நீண்ட பெரும் வாதங்களுக்கப்பால் இலகுவான, எளிமையான சூத்திரம் ஒன்று உண்டு. அதாவது “எதிரி அதனை எதிர்க்கின்ற அதனை நீ ஆதரி” இலங்கையின் புவிசார் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவல்ல இந்தியப் பேரரசு இவ்விவகாரத்தில் தமிழ் மக்களுக்குச் சாதகமாகத் தொழிற்படாவிட்டால் மற்றைய நாடுகளை எமக்கு ஆதரவாக அசைப்பது என்பது இன்றைய அரசியல் சூழலில் இயலாத காரியம்.

இன்று இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசானது இலங்கை மீது அழுத்த தந்திரோபாயத்தை (PressureTactics ) கையாள்கின்றது.

அதே நேரத்தில் மேற்குலகமும் தமது நலன்களின் நிமித்தம் இலங்கையைத் தமிழர்கள் மீதான மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற வடிவத்தில் அழுத்தத் தந்திரத்தைப் பிரயோகிக்கின்றன.

இதனை இந்நாடுகளின் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கை என்றும், இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப் போகிறது என்றும் நம்புவோமேயானால் அதைவிட இந்த உலகில் ஒரு ஏமாளித்தனம் இருக்க முடியாது.

ஆனால் அவர்கள் பயன்படுத்தும் இந்த அழுத்தத் தந்திரத்தை ஒரு தளமாகப் பயன்படுத்தி, அதனை மேற்கொண்டு இனப்படுகொலை என்ற நிலைக்கு உயர்த்தக்கூடிய வகையில் சாதுரியமாக முன்னெடுக்கவேண்டும்.

இதற்கேற்ற முன்னறிவுடன் கூடிய ஒரு வேலைத்திட்டத்தைத்தான் தமிழ் அரசியல் தலைமைகளும், புலம்பெயர் அமைப்புகளும் மேற்கொள்ளவேண்டும்.

இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தத் தந்திரமும், இலங்கை மீது மேற்குலகிற்கு இருக்கக்கூடிய சீற்றமும் அதனால் அவை மேற்கொள்கின்ற அழுத்தத் தந்திரமும், அத்தோடு இலங்கை அரசு மேன்மேலும் சீன சார்பாக மாறுவதும் தமிழர் தரப்புக்கு வாய்ப்பான பலசாதகங்களை ஏற்படுத்தியிருக்கிறன.

மேற்குலகின் சீற்றத்துடன் கூடவே இந்தியாவையும் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க வைப்பதற்கான முயற்சிகளைச் செய்தால் தான் இதனைத் தமிழ் மக்களின் நலனுக்குகந்த ஒரு அரசியல் தீர்மானமாக மாற்றி அமைத்திட முடியும்.

சர்வதேச அரங்கில் இதனை “இனப்படுகொலை” என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு எற்ற வகையில் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகத் தமிழ் தலைமைகள் சரியான வழியில் முன்னெடுக்க வேண்டும். அதற்காக அவர்கள் உடனடியாக தமிழக தலைவர்களை முதலில் சந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் தங்கிநின்று ஆளுங்கட்சி பிரமுகர்கள், எதிர்க் கட்சிப் பிரமுகர்கள், தேசியக் கட்சிகள், ஏனைய தமிழ் கட்சிகள் எனத் தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளையும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனைக்கான ஆதரவினை கோரவேண்டும்.

தமிழக மக்களின் ஆதரவுடன் இந்திய மத்திய அரசினை இலங்கை விவகாரத்தில் தமிழர்களின் நீதிக்கான கோரிக்கைகளை முன்வைப்பதே இன்றுள்ள முதல்நிலைப் பணியாகும்.

செயல் பூர்வ அர்த்தத்தில் அவ்வாறு செய்துவிடாமல் அழகிய வார்த்தையால் அறிக்கைகளும், ஒப்பாரிகளும் எதனையும் சாதித்துவிடாது. உலக ஒழுங்கு என்பது அரசுகளுக்கு இடையேயான ஒழுங்கு.

அரசுகளின் செயற்பாடுகளின்றி ஐ நா உட்பட எந்த ஒரு சர்வதேச அமைப்புக்களினது செயற்பாடும் இல்லை, எந்தொரு நிறுவனங்களினது செயற்பாடுகளும் இல்லை. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் சர்வதேச அரங்கில் தம்மை நிலைநிறுத்த வேண்டுமென்றால் நேரடியாக அரசுகளின் ஆதரவு அவசியம்.

இன்று உலக அரங்கில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஓர் அரசுகூட இல்லை. எட்டு கோடி மக்களுக்கும் மேற்பட்ட சனத்தொகையை கொண்ட தமிழகம் ஓர் அரை அரசாக இருக்கும் நிலையில் அதன் முழு அளவிலான ஆதரவைத் திரட்டி அதன் வாயிலாக இந்திய அரசின் ஆதரவை முதலில் பெற்றாக வேண்டும்.

இந்திய மத்திய அரசுக்கும் ஈழத்தமிழர் சார்ந்த தேவைகள் இந்த மாதிரி சூழலில் இருக்கும் பின்னணியில் தமிழகத்தை எழுச்சி கொள்ளச்செய்வதன் மூலம் இந்திய மத்திய அரசை ஈழத்தமிழர்கள் பக்கம் நகர்த்துவதற்கு ஏதுவான புறநிலை வாய்ப்புக்கள் உண்டு.

ஈழத் தமிழர்களின் பிரச்சனை சார்ந்த விடயத்தில் மாத்திரமே தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செய்யப்பட்ட வரலாற்றைக் காணமுடிகிறது.

அத்தோடு இலங்கையில் நிகழ்ந்திருப்பது “தமிழினப் படுகொலை” என்று தமிழக சட்டசபையில் இரண்டு தடவைகள் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் கவனத்திற்குரியது.

அந்தவகையில் அனைத்து தமிழக கட்சிகளின் ஆதரவினையும் திரட்டுவதற்கு உடனடியாக தமிழகம் நோக்கி ஈழத்தமிழ் தலைமைகள் தொடர்ந்து செல்ல வேண்டியது உடனடித் தேவையாகும்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கிணங்க தொடர்ச்சியாகத் தமிழக தலைவர்களைச் சந்திப்பது மட்டுமல்ல கேரளா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநில அரசியல் கட்சிகளையும் சந்திப்பது அவசியம்.