அக்கரைப்பற்றில் நாய் மலம் கழித்ததால் சண்டை; மாணவி உட்பட 7 பேர் காயம், கண்டித்து ஆர்ப்பாட்டம்!

அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8 ஆம் பிரிவு பகுதியில் மாணவி ஒருவர் உட்பட குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் இன்று (23) பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை பிரதேச மக்கள் மேற்கொண்டனர்.

குறித்த கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் எட்டுப் பேரையும் வெட்டியும் எட்டிப்பாராத பொலிஸார், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள், வீட்டில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும், சிறுவர் வன்முறையை தடுப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கி நின்றனர்.

சம்பவத்துக்குப் பொறுப்பானவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற மகஜரையும் ஜனாதிபதி உள்ளிட்ட உயர் மட்டத்தினருக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் கையளித்தனர்.இதனை பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நபரின் நாய் மலம் கழித்ததில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் சண்டை இடம்பெற்றுள்ளதாகவும் தாக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டுக்குள் புகுந்த தாக்குதலை மேற்கொண்டவரின் தலைமையிலான குழுவினர் பொல்லு கம்பி தடிகளால் அவர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐவர் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். .

Advertisement

இதேவேளை, இன்று (23) காலை சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவரின் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் நிலைமை தொடர்பில் பிரதேச செயலாளருடன் கேட்டறிந்து கொண்டனர்.