வடக்கு கோவிட் – 19 தொற்றுக்கான தடுப்பூசி தந்திரோபாயம்

கோவிட் – 19 வைரஸ் தொற்று பெரிதும் பரவும் பிரதேசமாக யாழ்.மாவட்டம் மாறி வருகின்றது.

எடுத்த எடுப்பில் பிரதேசங்கள் மற்றும் பகுதிகளை முடக்குவதில்லை, ஆக வெறுமனே “அதிகண்காணிப்பு வலயங்களாக’ அறிவித்து, அப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மட்டுமே தீவிரப்படுத்துவது என அரசு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக “முடக்கம்’ என்ற நிலைமை எங்கும் இல்லை.

யாழ்.மாவட்டத்தில், யாழ்.நகரப் பகுதியின் மத்தியில் வர்த்தக நிலையங்கள் அமைந்த பகுதி முடக்கம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் அது முடக்கப்படவில்லை. அதற்கு ஊடான போக்குவரத்து மற்றும் நடமாட்டங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. அப்பகுதிகளில் உள்ள வங்கிகள் இயங்குகின்றன.

Advertisement

ஆகத் தனியார் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.

யாழ்.நகர வர்த்தக நிலையங்களில் கோவிட் – 19 தொற்றை வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள், அவர்கள் அடையாளம் காணப்பட்டதும் பல்வேறு சிகிச்சை மையங்களுக்கு ஏற்றி அனுப்பப்படுகின்றார்கள்.

ஆனால் அத்தகையோரின் இருப்பிடங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டோர், தொற்றைப் பெற்றிருப்போர் எனச் சந்தேகிக்கப்படக் கூடியவர்கள் போன்ற தரப்புகளைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை திருப்தி தரும் விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

மேலும் யாழ்.ஆஸ்பத்திரிக்குள்ளும் கோவிட் – 19 தொற்றுப் பரவல் நீடிக்கும் மோச நிலைமை காணப்படுகின்றது.

இவை, அடுத்து வரும் நாள்களிலும் வாரங்களிலும் யாழ் குடா நாட்டில் தொற்றுப் பரவல் மேலும் இரட்டை இறக்கை கட்டிப் பறக்கக்கூடும் என்ற அச்ச நிலையைத் தந்து நிற்கின்றன.

எவ்வாறு இந்த நெருக்கடிக்கு யாழ்.குடாநாடு முகம் கொடுத்து மீளப் போகின்றது என்பதுதான் பிரதான கேள்வி.

இலங்கையில் கொழும்பு மற்றும் தென்பகுதி மாவட்டங்கள், கண்டி போன்ற பிரதேசங்களில் கோவிட் – 19 தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் வடக்கைப் பொறுத்தவரை, இங்கு சுகாதார – மருத்துவ சேவை ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கும் அது விரைந்து அளிக்கப்பட வேண்டும்.

ஒரு பக்கத்தில் தொற்றுப் பரவலைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல், மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்தல், தொற்றுக்குள்ளானோரையும் இடங்களையும் தனிமைப்படுத்தல், தொற்றுக்கு இலக்காகியிருக்கக் கூடியோர் எனக் கருதப்படுவோரைத் தீவிரமாகக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மறுபுறத்தில், தடுப்பூசி வழங்கலைத் தீவிரப்படுத்தி, கோவிட் – 19 பேரரக்கனிலிருந்து சமூகத்துக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவையிரண்டும் ஒரே சமயத்தில் தீவிர முனைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இப்போது யாழ்.குடாநாட்டில் தொற்றுப் பரவுகை தீவிரமடைந்திருக்கின்றது என்பதும் – அது மோசமான கட்டத்தை அடையும் ஏதுநிலை அதிகம் உள்ளது என்பதும் – அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இப்போது நன்கு தெரியும்.

இந்தச் சூழ்நிலையில் – பின்புலத்தில் – வடக்கில் உடனடியாகத் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பித்து விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டால் – அழுத்தம் வழங்கப்பட்டால் – நிச்சயமாக அரசு அதற்கு இணங்கும்.

அத்தகைய வேண்டுகோளுக்கு சம்மதிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கும் உண்டு. ஆனால், அத்தகைய அழுத்தத்தை முன்வைக்கும் நமது பிரதேச அரசியல் தலைவர்களும், மருத்துவ – சுகாதார அதிகாரிகளும் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவில் இருந்து ஆறு லட்சம் “சினோபாம்’ கொவிட் தடுப்பூசிகள் நேற்றுத்தான் அன்பளிப்பாக இலங்கைக்கு வந்து கிடைத்திருக்கின்றன.

இலங்கையில் உள்ள சீனர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆரம்பத்தில் இவை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் அங்கீகாரம் அளித்ததாகத் தெரியவரவில்லை.

இப்போதைய உடனடி நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து அழுத்தம் போக, இதுதான் சாட்டு என்று அந்தத் தடுப்பூசிகள் அனைத்தையும் வடக்கின் மீது கட்டியடித்து விடும் கொழும்பு.

அதாவது உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளை உலக அரங்கில் பெற்று தென்னிலங்கையில் வழங்கி விட்டு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெறாத ஊசிகளை வடக்கின் மீது தந்திரோபயமாகத் தள்ளிவிடுவார்கள். சம்பந்தப்பட்டோருக்கு இத்தகவல் முன்னெச்சரிக்கை.