வெளிநாடொன்றில் நிர்க்கதியான நிலையில் தவித்துவரும் 11 இலங்கைத் தமிழர்கள்!

மொரோக்கோவில் நிர்க்கதியான நிலையில் உள்ள 11 இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக ஊடக இணையத்தளம் ஒன்று உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக பல்வேறு முகவர்களுடாக வேலை வாய்ப்பு விசாவில் அழைத்துவரப்பட்ட இவர்கள் தற்போது நிர்க்கதியான நிலையில் நாடு திரும்புவதற்காக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் எமது செய்தி இணையத்தளத்தின் உதவியை நாடியுள்ளனர்.

வடக்கு ஆபிரிக்க நாடான மொரோக்கோவின் தஞ்ஜீயர் (Tangier) பகுதியில் உள்ள சிறிய வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த 11 பேரும் தாம் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் , அன்றாட உணவிற்கு கூட மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகவும் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மொரோக்கோ ராவாத் (Rabat) பகுதியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பினரிடம் (IOM) நாடுதிரும்புவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரையில் தமக்கான சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது இன்னல்களை ஊடக இணையத்தளம் மூலமாக வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த விடயம் குறித்து உடனடி கவனத்தில் எடுத்து தாயகம் திரும்பு கனவை நனவாக்குவார்களா என்ற நம்பிக்கையில் இவர்கள் காத்திருக்கின்றார்கள் ?


இந்த 11 பேர் கொண்ட குழுவில் கல்முனை , ஓந்தாச்சிமடம் , யாழ்ப்பாணம், கிளிநொச்சி , மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றார்கள். இவர்களின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடைய விபரங்களை வெளியிடவில்லை.