வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி மூல பொலிஸார் இன்மையால் மக்கள் அவதி!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி மூல பொலிஸார் இன்மையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பிரிவு உட்பட வவுனியா மாவட்டத்தில் 90 வீதமான தமிழ் மொழி பேசும் மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி பொலிஸார் இன்மையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக பொலிஸ் நற்சான்றிதழ், வாக்குமூலம் பதிவு, தண்டப்பத்திரம், முறைப்பாடு போன்றவற்றிற்கு சிங்கள மொழி பேசும் பொலிஸாரே கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் தொலைபேசியூடாக முறைப்பாட்டினை வழங்கும் சமயத்திலும் சிங்கள மொழியில் பொலிஸார் கதைப்பதினால் அவசர தேவையினையும் மக்களினால் நிவர்த்தி செய்ய முடியவில்லை.

கடந்த காலங்களில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் மொழி பேசும் பல பொலிஸாருக்கு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகளவில் தமிழ் மொழி பேசும் பகுதியில் பெருமான்மை சிங்கள மொழி பேசும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.