காதல் மனைவியை வயிறு, நெஞ்சு பகுதியில் குத்தி கொன்று விட்டு தப்பியோடிய கணவன்!

தமிழகத்தில் காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது அத்தை மகள் மல்லிகாவை (22) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ராஜகோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று மாலையில் ராஜகோபால் மது குடித்து விட்டு, தனது வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் மல்லிகா வீட்டின் அருகில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு வேலைக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகோபால், மனைவியை பின்தொடர்ந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சென்று மீண்டு்ம் தகராறு செய்தார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்லிகாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் வயிறு, நெஞ்சு பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனே அங்கிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (52) ஓடிச் சென்று, ராஜகோபாலை தடுக்க முயன்றார். ஆனால், மாரியம்மாளையும் கத்தியால் குத்தி விட்டு ராஜகோபால் தப்பி ஓடி விட்டார்.

மல்லிகா, மாரியம்மாள் ஆகியோரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மல்லிகா உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த மாரியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜகோபாலை தேடி வருகின்றனர்.