மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்? ஒன்றுபடா விட்டால் உண்டு விளைவு

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.

மகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய தேவை யாருக்கு அதிகமுண்டு? அந்தத் தேர்தல்கள் குறித்து ஜெனிவா தீர்மானத்தில் கூறவேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இருந்தது. கடைசியாக வந்த தீர்மானத்தை இந்திய-அமெரிக்க கூட்டுத் தயாரிப்பு என்று வர்ணிக்கும் ஆய்வாளர்களும் உண்டு.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பதாங்க உறுப்பாக மிஞ்சியிருக்கும் மாகாணக் கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலம் இந்திய-இலங்கை உடன்படிக்கையைப் பாதுகாப்பதும் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கை அரசாங்கத்துக்குள்ள கடப்பாடுகளை நினைவூட்டுவதும் இந்தியாவின் நோக்கமா?

Advertisement

ஆயின், ஜெனிவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தத்தைக் குறித்தும் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்தும் கூறப்பட்டிருப்பது என்பது தமிழ் நோக்கு நிலையிலிருந்தா அல்லது இந்தியாவின் நோக்கு நிலையிலிருந்தா என்ற கேள்வியும் இங்கு முக்கியம்.

அடுத்தது, மேற்கு நாடுகளை பொறுத்தவரை சீன சார்பு கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை நினைத்தபடி கையாள முடியவில்லை என்பதே உண்மை. எனவே, அவ்வாறு கையாளுவதற்குரிய நிலைமைகள் கனியும் வரையும் தமிழ் மக்களைத் தாக்காட்ட வேண்டிய ஒரு தேவை மேற்கு நாடுகளுக்கு உண்டு.

மாகாண சபைகள் ஒரு தீர்வில்லை என்ற பொழுதும் அவற்றை இயங்கு நிலையில் வைத்திருப்பதன் மூலம் தமிழ் அரசியலை ஓரளவுக்காவது நொதிக்காமல் தடுக்கலாம் என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் சிந்திக்க வாய்ப்புண்டு. எனவே, மேற்படி தரப்புகளின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

அதிலும் குறிப்பாக, மேற்கு நாடுகள் மற்றொரு ஆட்சி மாற்றத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த ஆட்சிமாற்றம் நிகழும் வரையிலும் தமிழ் தரப்பைத் தாக்காட்ட வேண்டும். அதற்கும் இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல் அவசியம். கடைசியாக வந்த ஜெனீவா தீர்மானம் எனப்படுவது ஒரு ஆட்சிமாற்றம் வரையிலும் அரசாங்கத்தை நீளக் கயிற்றில் ஓடவிடும் நோக்கிலானது. அதுவரையிலும் நிலைமைகளை சமாளித்துக் கொண்டு போகும் ஏற்பாடுகளே அதில் அதிகம் உண்டு.

ஷஒருபுறம் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பது போல தோன்றினாலும் நடைமுறையில் தங்களுக்கு சாதகமான ஒரு காலகட்டம் கனியும் வரை அரசாங்கத்தை நீளக் கயிற்றில் ஓடவிடுவது கடைசியாக வந்த ஜெனிவா தீர்மானத்தின் உள்நோக்கம் ஆகும். எனவே, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நோக்கு நிலைகளில் இருந்து பார்த்தால் வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய தேவை உண்டு.

அதேசமயம், அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது வேறு விதமாகச் சிந்திக்க முடியும். ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக ஒரு தோற்றத்தை அரசாங்கம் கட்டி எழுப்பி வருகிறது. அப்படியொரு புதிய யாப்பு உருவாக்கப்பட்டால் அதில் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் பதாங்க உறுப்பாகிய 13ஆவது திருத்தம் அதாவது, இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கடைசி சுவடும் அகற்றப்பட்டுவிடும்.

எனவே, இதுவிடயத்தில் இந்தியாவைச் சீண்டாமல் முடிவுகளை எடுக்க அரசாங்கம் முயற்சிக்கலாம். அதன்படி, மாகாண கட்டமைப்புக்களைத் தொடர்ந்தும் பேணுவது போல ஒரு தோற்றத்தைக் காட்ட விரும்பக்கூடும். இந்த அடிப்படையில் வடக்கு கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு.

அதைவிட மேலும் ஒரு காரணம் உண்டு, இப்போதுள்ள கட்சி நிலைவரங்களின்படி வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் தரப்பு அமோகமான பெரும்பான்மை பெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கிழக்கில் கூட்டமைப்பு, பிள்ளையான், வியாழேந்திரன், கருணா மற்றும் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகள் போன்றன தமிழ் வாக்குகளைப் பங்கிடும். இதனால், தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலைமைகள் அங்கே அதிகம். ஆனால், சிங்கள, முஸ்லிம் வாக்குகள் அவ்வாறன்றி திரளாகக் குவிக்கப்படும் நிலைமைகள் தெரிகின்றன. இதனால் கிழக்கில் தமிழ் தரப்பு அமோக பெரும்பான்மையைப் பெறாமல் முஸ்லிம் உறுப்பினர்களில் தங்கியிருக்கும் ஒரு நிலைமை தோன்றக்கூடும்.

இது விடயத்தில் முஸ்லிம்களை கவரக்கூடிய ஒரு வேட்பாளராக சாணக்கியனை இறக்குவதற்கு சுமந்திரன் முயல்வதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு மாவை அணியின் ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. இது கிழக்கின் நிலமை.

வடக்கில் கடந்த மாகாண சபைபோல இம்முறை ஏகபோக வெற்றியைக் கூட்டமைப்பு பெறுமா என்பது சந்தேகமே. ஏனெனில், தமிழ் வாக்குகளை தமிழ் தேசியக் கட்சிகளே மூன்றாக உடைக்கும். இதுதவிர. ஈ.பி.டி.பி.யும் ஏனைய தென்னிலங்கை மையக் கட்சிகளும் ஒருபகுதி வாக்குகளை பங்கிடக்கூடும். தமிழ் தேசிய வாக்குத் தளத்தைப் பொறுத்தவரை மூன்று கட்சிகள் மட்டுமல்லாது கூட்டமைப்பின் மையக் கட்சியான தமிழரசுக் கட்சியே வாக்குகளை ஒரு மையத்தில் திரட்டுமா என்ற கேள்வி உண்டு.

ஏனெனில், தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையிலான பனிப்போர் துலக்கமாகத் தெரிகிறது. வடக்குக்கும் கிழக்குக்குமாக இரண்டு அணிகளும் தனித்தனி ஓட்டங்களை ஓடுகின்றன. இதன்மூலம், தமது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்த முயற்சிக்கின்றன. இதுவிடயத்தில், மாவையிடம் தலைமைத்துவப் பண்பு குறைவு என்பதே சுமந்திரனுக்குள்ள ஓர் அனுகூலமாகும்.

ஆனால், தமிழரசுக் கட்சி பல தசாப்தகால பாரம்பரியத்தைக் கொண்ட கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்புக்களைக் கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் சிந்தித்தால் சுமந்திரன் நினைப்பதுபோல கட்சியை அவர் வசப்படுத்தலாமா என்பதும் சந்தேகமே. இவ்வாறு சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையிலான பனிப் போருக்குள் தமிழரசுக் கட்சி மேலும் பலவீனமடையும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.

குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளர் யார், அமைச்சர்களாகக் கூடிய வேட்பாளர்கள் யார் யார் போன்ற தெரிவுகளிலெல்லாம் இரண்டு அணிகளுக்கும் இடையே ஒத்த கருத்தை அடைவது கடினமாக இருக்கலாம். இந்த மோதலை ஒரே ஒரு விடயம்தான் மேவி மறைக்கும். அது என்னவெனில், வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்று இரண்டு தரப்பும் நம்புமாக இருந்தால் அவர்கள் தங்களுக்கு இடையிலான உள்குத்துக்களை ஓரளவுக்கு ஒத்திவைக்கக்கூடும். இது கூட்டமைப்புக்குள் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

எனவே, இம்முறை வடக்கு மாகாணத்தில் போன தடவைபோல அமோகமான பெரும்பான்மையைப் பெறுவது சவால்கள் மிகுந்ததாக இருக்கும். இது தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளுக்கு புதிய பேர வாய்ப்புக்களை வழங்கக்கூடும். எனவே, இரண்டு மாகாணங்களுக்கும் தேர்தல் நடந்தால் அதில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் பெருவெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று அரசாங்கம் நம்பினாலும் விரைவில் தேர்தல்கள் நடக்க வாய்ப்புண்டு.

ஏற்கனவே, காணி அதிகாரமும் பொலிஸ் அதிகாரமும் இல்லாத ஒரு மாகாண கட்டமைப்புக்குள் பலமான பெரும்பான்மையும் இல்லையென்றால் அதுவும் அரசாங்கத்துக்கு வெற்றியே.

எனவே, மேற்கு நாடுகள், இந்தியா, அரசாங்கம் ஆகிய மூன்று தரப்புகளின் நோக்கு நிலைகளில் இருந்து பார்த்தால் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.

ஆனால், இங்கே உள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால், இது மூன்றும் தமிழ் தரப்புக்கு வெளியிலான தரப்புகளின் நோக்கு நிலைகளாகும். அதேசமயம் இது விடயத்தில் தமிழ் தரப்பின் நோக்கு நிலை எதுவாக இருக்க வேண்டும்?

முதலாவதாக, என்ன காரணங்களுக்காக வெளித்தரப்புக்கள் மாகாணசபைத் தேர்தல்களை ஆதரிக்கின்றன என்பதனை தமிழ் தரப்பு அதன் ஆழ அகலத்தோடு விளங்கி வைத்திருக்க வேண்டும். ஜெனிவா தீர்மானத்தின் பின்னரான அரசியலை விளங்கிக் கொள்வது என்பதும் அதுதான்.

அதாவது, ஒரு ஆட்சி மாற்றத்துக்கு வேண்டிய நிலைமைகள் கனியும்வரை அரசாங்கத்தை நீளக் கயிற்றில் ஓடவிடும் ஒரு கால அவகாசத்தைக் கடப்பதற்கு மாகாண சபைகளை அவர்கள் கருவிகளாகப் பார்க்கிறார்கள். எனவே, இலங்கை அரசாங்கத்தை தமக்குச் சாதகமான விதங்களில் கையாள்வதற்கான ஒரு காலகட்டத்தை உருவாக்கும் வரையிலுமான இடைப்பட்ட காலத்தை நோக்கியே வெளித் தரப்புக்கள் மாகாணசபைத் தேர்தல்களை ஊக்குவிக்கின்றன.

ஆனால், தமிழ் தரப்பு அவ்வாறான ஒரு நோக்கு நிலையிலிருந்து மாகாணசபைத் தேர்தல்களை அணுக முடியாது. மாறாக பொறுப்புக் கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று கேட்ட மூன்று கட்சிகளும் மாகாணசபைகள் குறித்தும் ஒரு கூட்டு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் சில மூலைகளில் கதைக்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே விக்னேஸ்வரனைக் கொண்டுவந்து கூட்டமைப்பு பட்டபாடு போதும் என்று ஒரு பகுதி தமிழரசுக் கட்சியினர் நம்புவதாக தெரிகிறது. அப்படியொரு பொது வேட்பாளர் கட்சிக்குள் இருந்தே வர வேண்டும். அப்படி வந்தால்தான் அவர் கட்சிக்குக் கட்டுப்பட்டவராகவும் இருப்பார்.

தவிர, மாகாண சபைக்குள் தனது ஆட்களையும் கட்டுப்படுத்தக் கூடியவராக இருப்பார். வெளியிலிருந்து வருபவரைக் கட்சியும் கட்டுப்படுத்துவது கடினம். அவரும் கட்சி ஆட்களைக் கட்டுப்படுத்தும் பாரம்பரியம் அற்றவராக இருப்பார். எனவே, எந்தவொரு பொது வேட்பாளரும் கட்சிகளுக்குள் இருந்தே வரவேண்டும் என்ற ஒரு வாதம் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், இதுபோன்ற வாதப் பிரதிவாதங்கள் எல்லாவற்றுக்கும் முதலில் ஓர் அடிப்படைக் கேள்வியை எழுப்ப வேண்டும், தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் வாக்குச் சிதறலைத் தடுக்கும் நோக்கத்தோடும் வெளித்தரப்புகளின் நிகழ்ச்சி நிரல்களை விளங்கிக்கொண்டும் ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னரான அரசியலை ஓரணியாக எதிர்கொள்வது என்ற அடிப்படையிலும் ஒரு தற்காலிகமான அல்லது தந்திரோபாயமான இணக்கத்துக்கு வரத்தயாரா என்ற கேள்வியே அதுவாகும்.

அப்படியொரு இணக்கத்துக்கு வரத்தயாரில்லை என்றால் அடுத்த மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் எத்தனை ஆசனங்களை வென்றாலும் அதன் இறுதி விளைவைக் கருதிக்கூறின் அது தோல்வியாகவே முடியும்.

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்