கனடாவில் உயிரிழந்த இந்திய இளைஞரின் உடலை இந்தியா கொண்டுவர முடியாத நிலைமை!

கனடாவில் உயிரிழந்த இந்திய இளைஞரின் உடலை இந்தியா கொண்டுவர, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் படித்துமுடித்துவிட்டு வேலை செய்துகொண்டிருந்த முதுகலை பொறியியல் பட்டதாரி ஹைதராபாத்தைச் சேர்ந்த ரேனு சூர்ய பிரசாத் முரிகிபிடி (29).

மார்ச் 30ஆம் திகதி, தொலைபேசியில் மகனை தொடர்புகொள்ள முடியாததால், ரேனுவின் பெற்றோர் அவரது நண்பர்களை அழைக்க, அவர்கள் ரேனுவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கே அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். ஆரம்பகட்ட உடற்கூறு ஆய்வில் ரேனு மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ரேனுவின் மரணத்தால் குடும்பம் முழுவதும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளதாக அவரது உறவினரான காவ்யா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரேனுவின் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கனடாவைப் பொருத்தவரை ரேனுவின் உடலை அனைத்து நடைமுறைகளையும் முடித்து இந்தியா கொண்டு சேர்க்க 10 முதல் 12 நாட்கள் வரை ஆகலாம்.

இந்நிலையில், இந்திய அரசு ரேனுவின் உடலை இந்தியா கொண்டுவர உதவுவதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ரேனுவின் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்துவரும் காவ்யா, தன் தங்கை மற்றும் பெற்றோருக்கு உதவுவதற்காகவே ரேனு கனடாவுக்கு சென்றதாக தெரிவிக்கிறார்.

ஆனால், அவருக்கு சரியான ஒரு வேலை கிடைக்காததால், கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார் ரேனு.

குடும்பத்திற்கான பணத்தேவைகள், தங்கையின் திருமணத்துக்காக வாங்கிய கடன் என சுமைகள் அழுத்த, சரியான வேலையும் கிடைக்காததால் அதிக மன அழுத்தத்திற்குள்ளாகியிருக்கிறார் ரேனு, அதுவே அவரது உயிரைப் பறித்திருக்கிறது என்கிறார் காவ்யா.

இனி எங்களால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான், அது அவருக்கு பிரியாவிடை அளிப்பதுதான் என்று கூறும் காவ்யா, ஒருமுறையாவது ரேனுவின் முகத்தை பார்த்துவிடவேண்டும் என்று நாங்கள் அனைவரும் காத்திருகிறோம் என்கிறார்.

Next articleசெல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை!