இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறித்த 50 பக்க ஆவணக் கோவையைத் தொகுத்து அதனை இங்கிலாந்து வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திற்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் சமர்ப்பித்துள்ளது.
இந்த சமர்ப்பிப்பு தற்போதைய இலங்கையின் இராணுவத் தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வா 06 யூலை 2020 இல் உருவாக்கப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய மனித உரிமைகள் (GHR)) தடை பொறிமுறையின் கீழ் ஏன் கண்டிக்கப்பட வேண்டும்? என வாதிடுகின்றது.
‘எங்களிடம் இலங்கையின் போரின் இறுதிக்கட்டம் பற்றி கவனமானமுறையில் சர்வதேச வழக்கறிஞர்கள் மற்றும் சட்டவாளர்கள் மூலம் சேகரித்த ஆதாரங்களைக் கொண்ட விரிவான களஞ்சியம் ஒன்று உள்ளது. இங்கிலாந்தில் தற்போதுள்ள பல பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலம் இந்த சமர்ப்பிப்பை உருவாக்குவதற்கும் சவேந்திர சில்வா மற்றும் அவரது கட்டளைக்கு கீழ் இருந்தவர்களுடனும் இணைப்புகளை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமானதாக இருந்தது’ என சர்வதேச உண்மை மற்றும் நீதிககான செயற்திட்ட அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கில் 2009 இல் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்தபோது சவேந்திர சில்வா வாழ்வுரிமை உட்பட பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதில் அவரது பங்கு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிககான செயற்திட்டத்தின் இந்த சமர்ப்பிப்பு விபரித்துக் கூறுகிறது.
அது பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறப்பட்ட இடங்களில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் உணவுக்காக வரிசையில் நின்றவர்கள் மீதான எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதலில் உயிர்தப்பிய தமிழர்களின் கொடுமை நிறைந்த நேரில்கண்ட சாட்சி வாக்குமூலத்திலிருந்து இந்த சமர்ப்பிப்பு உருவாகிறது.
இவர்களில் பலர் தற்போது இங்கிலாந்தில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கிலாந்து அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய பகுதியாக உள்ள பாலியல் வன்புணர்வு உட் பட பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதையில் சில்வாவின் தொடர்பினை இந்த சமர்ப்பிப்பு கவனமாக ஆராய்கின்றது.
‘2020 இல் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் போரின் முடிவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து கூறப்பட்ட அவரது வகிபாகத்திற்காக அவரைக் கடுமையாக கண்டனம் செய்தது .ஆனால் இங்கிலாந்தின் தடைபொறிமுறையின் அதிகாரவரம்பு வேலைகள் விரிவானதாக இருப்பதுடன் இராணுவத் தாக்குதலின் போது வைத்தியசாலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட ஏனைய பொதுமக்களின் இடங்கள் மீதான எறிகணைத் தாக்குதலில் அவரது பங்கினை உள்ளடக்குகிறது.
மீறல்களை முழுமையாக அங்கிகரித்தல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தல் என்பன முக்கியமானது என சூக்கா கருத்து தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் கண்டனம் பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்னுமொரு முக்கிய முன்னோக்கிய படியாக இருக்கும். அத்துடன் அண்மையில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவானதாக இருக்கும். இதற்காக பிரிட்டனே முக்கிய பங்குவகித்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு இங்கிலாந்தின் புதிய தடை பொறிமுறையினை பிரயோகிப்பது தொடர்பிலான அரசியல் விருப்பம் அண்மைய பாராளுமன்ற விவாதத்தின் போது வெளிபடையாக தெரிந்தது, இந்த விவாதத தில் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சவேந்திர சில்வா உட்பட இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் ஏன் தடைகளை விதிக்கவில்லை? எனக் கேட்கிறார்கள், இந்தச் சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வாவின் பெயர் ஆறு தடவைகள் குறிப பிடப்பட்டது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது