கிளிநொச்சியில் முன்னாள் புலி உறுப்பினரின் பெயரில் வீதி!

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘வெற்றி’ வீதியின் பெயரை அகற்றுமாறும் அல்லது அந்த நபரின் சொந்தப் பெயரை வைக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபைக்குச் சொ ந்தமான இவ் வீதியின் பெயரை ‘வெற்றி’ வீதி என பெயரிடப்பட்டு கடந்த 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கிளிநொச்சி பொலிசார் நேற்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். .

இதன்போது, அந்தப் பெயருக்கு சொந்தமானவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி எனவும், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் சமூகமட்ட செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தமைக்காக அவரது பெயரை பொதுமக்கள் சூட்டியதாகவும் விசாரணைகளின்போது பொலிசாருக்கு தெரிவித்ததாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

இவ் வீதி பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைவாகவோ அல்லது, வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ பிரதேச சபையினால் திறந்து வைக்கப்படவில்லையெனவும், பொதுமக்கள் தாமாக முன்வந்து வீதிக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதியாக தானும் கலந்து கொண்டதாக விசாரணைகளில் தான் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

வீதியின் பெயர்ப்பலகையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.அதற்குமைவாக தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

Previous articleமோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி!
Next articleஇன்றைய இராசிபலன்கள் (12.04.2021)