இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு பொருட்களின் விற்பனை அதிகரிப்பு!

இந்த முறை தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு பொருட்கள் சங்கம் தெரிவித்தது.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் பட்டாசு பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஈடுசெய்யும் வகையில் பட்டாசு பொருட்களை விநியோகிக்க முடியாமல் போனதாக அந்த சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் கொவிட் பரவல் என்பன காரணமாக, இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்திருந்த பட்டாசு தொழிற்துறையானது, இந்த புத்தாண்டில் ஓரளவு மேம்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், நாடுமுழுவதுமுள்ள கேள்விக்கு ஏற்றவாறு, உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தியை வழங்க முடியாதுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் கடந்த ஆண்டு கொவிட் பரவல் காரணமாக, உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் சந்தைக்கு விநியோகிக்க முடியாமல் போனது.

இதன் காரணமாக அனைத்து வியாபாரிகளும் நிதி பிரச்சினையை எதிர்நோக்கினர்.

இதன் காரணமாக ஏற்பட்ட அச்சம்தான், தற்போது பட்டாசு தொழிற்துறை உற்பத்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான பிரதான காரணமாகும் என அகில இலங்கை பட்டாசு பொருட்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வியாபாரிகள், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்துகொள்ள முடியாமல் தாங்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்களின் கேள்விக்கு ஏற்றவாறு பட்டாசுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பட்டாசு பொருட்களை வெடிப்பதன் ஊடாக ஏற்படும் அதிக சத்தத்தால் நாய், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அச்சமடையக்கூடும் என்பதால் புத்தாண்டு காலப்பகுதியில் அவை தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு விலங்கு பாதுகாப்பு அமைப்புக்கள், மக்களிடம் கோரிக்கை விடுத்தள்ளது.

Previous articleஇன்று 153 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!
Next articleசிவனும் சக்தியுமாக தோற்றத்தில் உள்ளதாக கூறி தன்னுடைய மனைவியை தன் தோழிக்கு கட்டிவைத்த கணவன்!