வவுனியா தோணிக்கல் பகுதியில் 5000 ரூபாய் பணம் பெறச்சென்ற மக்கள் பலர் ஏமாற்றம்!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் பணத்தை பெறச் சென்ற மக்கள் பலர் பணம் பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலநிலை வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் பதிவாகியாகியுள்ளதுடன், இதன் காரணமாக அங்கு குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் – சிங்களப் புதுவருடத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள்,

சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் குறித்த பணத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட தரப்பினர் பலரும் கடந்த இரு தினங்களாக ஒன்று கூடிய போதும் அவர்களுக்கு முழுமையாக பணம் வழங்காது சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமே கொடுப்னவு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (12.04) சென்ற பலரை இன்று (13.04) வருமாறு உத்தியோகத்தர்கள் அறிவித்த போதும் இன்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் கொடுப்பனவை வழங்கிவிட்டு ஏனையவர்களை 15 ஆம் திகதி வருமாறு தெரிவித்திருந்தனர்.

இதனால் அங்கு புதுவருட கொண்டாட்டத்திற்காக பணம் பெற வந்த சிலர் தமக்கு புது வருடத்திற்கு தான் அரசாங்கம் குறித்த பணத்தை வழங்குகின்றது. ஆனால் நீங்கள் அதனை தராமல் 15 ஆம் திகதி தருவது என்ன நியாயம். எம்மை வேண்டும் என்றே அலைக்கழிக்கிறீர்கள்.

வேறு பகுதிகளில் பல கிராம அலுவலர்களும், அரச உத்தியோகத்தர்களும் இரவிரவாக நின்று கொடுப்பனவுகளை வழங்குகின்ற போதும் இங்கு மட்டும் நீங்கள் பணத்தை உரிய காலத்தில் வழங்காது இழுத்தடிப்பதாக தெரிவித்து தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கிராம அலுவலர் பொலிசாரை அழைத்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், பொலிஸ் பாதுகாப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் கொடுப்பனவு வழங்கப்பட்டு ஏனையவர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தபோது, தாம் புதுவருடத்திற்கு மக்களுக்காக அரசாங்கம் தந்த பணத்தை தருமாறு கேட்ட நிலையில் அமைச்சர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, எமது மாவட்ட திலீபன் எம்.பி யாரிடம் என்றாலும் சொல்லுங்கள்.

இப்படி தான் செய்ய முடியும் எனத் தெரிவித்து எமக்கு புதுவருடத்திற்கு பணத்தை தராது கிராம அலுவலர் இழுத்தடிப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பில் கிராம அலுவலரை தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போதும், மக்கள் முழுமையாக செல்வதற்கு முன்னரே கிராம அலுவலர் 4.30 மணியளவில் அங்கிருந்து சென்றுவிட்டார்.

Previous articleபுத்தாண்டு நாளில் 165 பேர் இரத்தக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleஜிபூட்டி அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் உயிரிழப்பு!