கிளிநொச்சியில் பற்றைக்குள் மீட்கப்பட்ட கார் கொழும்பில் கடத்தப்பட்டதாம்!

கொழும்பில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரொன்று கடத்தப்பட்ட நிலையில், அந்த கார் கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள வனப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான குறித்த கார், வாடகை அடிப்படையில் சிலரினால் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் , காரின் சாரதி மீது தாக்குதல் நடத்திய சிலர், காரை கடத்திச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் எதற்கான இந்த காரை கடத்திச் சென்றார்கள் என்பது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களினால், இந்த கார் வாடகை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாகனத்தை கடத்திச் சென்றதாக கூறப்படும் சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியன ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்குறித்த கார், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!
Next articleரயில் பாதையின் சமிக்ஞை விளக்கு அருகே தடம் புரண்ட ரயில்!