இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தின் ஆற்றங்கரையில் சடலங்கள் எரிக்கப்படுவதால், அதன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை தடுப்பதற்காக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் லக்னோ மாநகராட்சி கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவாலும், பிற காரணங்களாலும் இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட இடமின்றி வரிசையில் காக்க வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, இது குறித்து, பைகுந்த் தாம் இடுகாட்டில் பணியாற்றி வரும் முன்னா என்பவர் கூறுகையில், கடந்த புதன் கிழமை கொரோனாவால் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அன்றைய தினம் 46 பேரை எரித்தேன்.
நான் 6 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். இதுவரை ஒரே நாளில் இத்தனை சடலங்கள் வந்ததில்லை. அது போல் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 124 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால் பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா காட்டில் 400 உடல்கள் எரியூட்டப்பட்டன. இதில் 276 மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அது போல் கோமதி ஆற்றங்கரையில் உள்ள பைன்சாகுந்த் இடுகாட்டிலும் நேற்றைய தினம் ஏராளமான சடலங்கள் எரிக்கப்பட்டன.
இதனால் ஆங்காங்கே தீ சுவாலைகள் பற்றி போல் எரிந்து கொண்டிருந்தன. இத்தனை சடலங்களை ஒரே நேரத்தில் எரிப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
உத்திரப்பிரதேசத்தில் ஏற்படும் இது போன்ற அவலநிலை காரணமாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதால், அந்த பைன்சாகுந்த் இடுகாட்டில் பிணங்கள் எரிப்பதை யாரும் பார்த்திராமல் இருப்பதற்காக தகரங்கள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. இது இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது