கொழும்பு, மருதானையில் ஆயுத குழுவொன்று முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது மேற்கொண்ட கொடூர தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி மாலை முச்சக்கர வண்டி ஒன்று, 16 வயதுடைய இளைஞனை மோதியுள்ளது. பின்னர் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இளைஞனுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த சம்பவத்தின் பின்னர் குறித்த முச்சக்கர வண்டி மருதானை – மொஹிதீன் சந்தைக்கு வந்துள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த நபர் தொடர்பில் தேடி பார்ப்பதற்காக வந்த நபர் ஒருவர் வழங்கி தகவலுக்கமைய 20 பேர் கொண்ட குழுவொன்று அவ்விடத்தில் குவிந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த நபர்களுக்கும் இந்த கும்பல் அச்சுறுத்தியுள்ளது. அந்த கும்பல் முச்சக்கர வண்டியை அடித்து உடைத்ததுடன், சாரதியையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக குறித்த சாரதி தப்பி ஓடும் காட்சி சிசிரீவி கட்டமைப்பில் பதிவாகியுள்ளது.
சாரதி தப்பி சென்ற பின்னர் மீண்டும் அவரை தேடி சென்று இந்த கும்பல் தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 22 வயதுடைய சாரதி வெட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.