அரசு மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பாம்பு கிடந்ததால் குடிமகன் ஒருவர் அதிர்ச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், சுத்தமல்லி கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று முந்தினம் தமிழ் புத்தாண்டு அன்று நண்பர்களுடன் மது அருந்தலாம் என்று எண்ணிய சுரேஷ், தனது நண்பர்களோடு சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி பாதியை அருந்திவிட்டு மீதியை வைத்துள்ளார்.
மீதமுள்ள மதுவை அருந்துவதற்காக மது பாட்டிலைப் பார்த்தபோது மதுபாட்டிலில் குட்டி பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரசு டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் தகவலைச் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் கொஞ்சம் கூட காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லையாம்.
சிகிச்சை பெற்று வரும் சுரேஷ்
இந்நிலையில்,பாம்பு இருந்த மதுவைக் குடித்ததால் பயத்தில் சுரேஷ் பக்கத்திலிருக்கும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருவது. இச்சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுரேஷ் உறவினர்களிடம் பேசுகையில். ”குடிமகன்களின் வாழ்க்கையில் அரசு மெத்தனமாகச் செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. அரசு வழங்கக்கூடிய மது பாட்டிலில் பாம்பு எப்படி வந்தது? இது அரசு மது தானா, இல்லை அதிகாரிகளுடன் துணையுடன் பாரின் உரிமையாளர் டூப்ளிகேட் மதுவை விற்கிறாரா என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது. மதுவை சுரேஷ் குடித்து ஏதாவது ஒன்று ஆனால் அவரது குடும்பத்தை யார் பார்ப்பது.? இச்சம்பவம் இறுதியாக இருக்கட்டும். இதனை அதிகாரிகள் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் இப்பகுதியில் அரசு மதுபானக்கடை இருக்காது” என்று எச்சரித்தனர்.
மதுபானத்தில் கிடந்த பாம்பு
இதுகுறித்து கலால் துறை அதிகாரியிடம் பேசினோம். “மதுபாட்டிலில் பாம்பு கிடந்ததாகத் தகவல் எங்களுக்கும் வந்தது. அதன்பேரில் விசாரணை தொடங்கியிருக்கிறோம். அத்தோடு இப்பகுதியில் போலிமது விற்பனையாகிறது என்று சொல்கிறீர்கள். இது குறித்தும் விசாரணை நடத்துகிறோம்” என்று முடித்துக்கொண்டார்.