துரைமுருகன் வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள் ஒன்றும் கிடைக்காமல் சோகக்கடிதம் எழுதி வைத்து விட்டு திரும்பினர்!

ஏலகிரி மலையில் துரைமுருகன் வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள், அருகில் உள்ள கெஸ்ட் ஹவுஸிற்குள் புகுந்து அங்கு எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில், ஒரு நூறு ரூபாய் கூட வைக்க மாட்டியா என லிப்ஸ்டிக்கால் விரக்தியுடன் எழுதிச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, மஞ்சம்கொள்ளை புதூர் கிராமத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள், அந்த கெஸ்ட் ஹவுஸ் கதவு மற்றும் பூட்டை உடைத்து திருட முயன்றனர். ஆனால், அங்கு எதுவும் கிடைக்காததால், மர்ம நபர்கள் அங்கு பொறுத்திருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து டிஐஜி காமினி தலைமையில் எஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட போலீஸ் படையினர் கைரேகை நிபுணர்கள் துரைமுருகனின் விருந்தினர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கதவை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

அதே பகுதியில் வாணியம்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளருக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் ஒன்றில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அங்குள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. ஆனால் அங்கும் பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் அங்கிருந்த டிவியை உடைத்து போட்டுவிட்டு சென்றிருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் அங்கிருந்த மதுபானத்தை குடித்துவிட்டு, லிப்ஸ்டிக்கால் ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்டியா என சுவற்றில் எழுதிச் சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த நோட்டு புத்தகத்தில் ”ஒரு ரூபாய் கூட இல்ல… எடுக்கல” எனவும் எழுதி வைத்து சென்றுள்ளனர். இரு விருந்தைனர் இல்லங்களிலும் எதுவும் கிடைக்காத ஏமாற்றத்தில் சிசிடிவி கேமரா பதிவில் பதிவாகி சிக்கி விடுவோம் என்ற பயத்தில் சிசிடிவி ரெக்கார்டரை கையோடு எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே ஏலகிரியில் உள்ள விருந்தினர் இல்லங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Previous articleமுல்லைத்தீவில் கோடாலி எடுக்கச் சென்றவரை மின்னடித்தது தூக்கி எறிந்தது!
Next articleஅமெரிக்காவில் துப்பாக்கிதாரியின் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு 60 பேர் வரை காயம்!