மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் உயிரிழந்த நிலையில் அவரது உடலானது விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு இறுதி அஞ்சலிக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நடிகர் விவேக்கின் வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக பல திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் குவிந்து வருகின்றனர். இன்று காலை 8.30 மணிக்கு மேல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவரது வீட்டில் 40க்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள தகன மேடையில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவேக்கின் உடலானது எவ்வளவு நேரம் அஞ்சலிக்காக வைக்கப்படும் மற்றும் இறுதி சடங்கு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.