மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளர் – சித்தார்த்தன் எம்.பி பகீர்

மாகாணசபைத் தேர்தல் ஒன்று இடம்பெறுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எனினும், மாகாணசபைத் தேர்தலை நடாத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய அரசாங்கமானது மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வதற்கான அறிகுறிகளே பெரும்பாலும் காணப்படுகின்றன.

எல்லை நிர்ணயக் குழுவை ஏற்படுத்தி மாகாணசபை தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் அரங்கேறி வருகின்றன. மாகாண சபையை பொருத்தவரை அரசியல் பேசும் இடமல்ல, அதிகாரிகளுடன் இணைந்து அபிவிருத்திகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய சபை.

இதனை நன்கு செயற்படக்கூடிய ஆளுமை அரசியல் அறிவு அதிகாரிகளுடன் அன்னியோன்னியமாக நடந்து கொள்ளக் கூடிய ஆற்றல் மற்றும் தமிழ் மக்களுடைய ஆரம்ப கால வரலாறுகளை நன்கு அறிந்தவராக மாவை சேனாதிராஜா காணப்படுகிறார்.

மணிவண்ணன் தொடர்பில் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றது. மணிவண்ணன் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அல்ல அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்றால் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

ஆகவே மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் கருத்து எனது தனிப்பட்ட நிலைப்பாடு அதற்கான காரணங்களையும் கூறியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleநடிகர் விவேக் மரணம் – கதறி அழுத வடிவேலு
Next articleஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வின்சன் சுபத்ரா காலமானார்!