போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தார் உறவினர் சதியால் தம்பதிக்கு வெளிநாட்டில் ஜெயில் தண்டனை!

மும்பையை சோ்ந்த முகமது சாரிக் (வயது30) மற்றும் அவரது மனைவி ஒனிபா. இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கத்தாருக்கு சுற்றுலா சென்றனர். இதில் தோகா விமான நிலையத்தில் தம்பதியிடம் இருந்து 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த போது ஒனிபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் கத்தார் கோர்ட்டு அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியது.

இதற்கிடையே தம்பதியினர் தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கத்தார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் அவா்கள், முகமது சாரிக்கின் அத்தை தபாசும் குரேசி தான் புகையிலை என கூறி நண்பர் ஒருவருக்கு கஞ்சாவை கொடுத்துவிட்டதாக கூறினர். மேலும் கஞ்சா என்று தொியாமல் அதை எடுத்து வந்ததாகவும் கூறியிருந்தனர்.

இதையடுத்து மனுவை விசாரித்த கோர்ட்டு, தம்பதிக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது. மேலும் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நடந்த விசாரணையில் தம்பதி குற்றம் அற்றவர்கள் என்பது தெரியவந்தது. இதனால் விடுவிக்கப்பட்ட அவர்கள் தங்களது பெண் குழந்தை ஆயத்துடன் கத்தாரில் இருந்து மும்பை திரும்பினர். அவர்கள் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மும்பை விமான நிலையம் வந்து இறங்கினர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Previous articleஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வின்சன் சுபத்ரா காலமானார்!
Next articleசிவாஜிலிங்கம் திடீர் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!