யாழில் கடந்த 4 மாதங்களில் 9 பாடசாலைகளில் 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை அடித்த கும்பலில் 3 பேர் சிக்கினர்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகள் உடைக்கப்பட்டு சுமார் 40 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த

20 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூவரும் இணைந்து கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணம் மானிப்பாய், காங்கேசன்துறை, சாவகச்சேரி

மற்றும் பூநகரி பொலிஸ் பிரிவுகளில் உள்ள 9 பாடசாலைகளை இரவு வேளைகளில் உடைத்து பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடியுள்ளனர்.

திருடிய பொருள்களில் ஒரு பகுதியை விற்பனை செய்தும் உள்ளனர். செம்மணியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி மகளிர் கல்லூரி, புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயம்,

மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயம், கைதடி கலைவாணி வித்தியாலயம், கட்டுடை சைவ வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம், கீரிமலை வலித்தூண்டல் றோ.க.த.க பாடசாலை

மற்றும் பூநகரி மத்திய கல்லூரி ஆகியவற்றிலேயே சந்தேக நபர்களால் பொருள்கள் திருட்டப்பட்டுள்ளன. இந்தப் பாடசாலைகளில் இரண்டில் இருதடவைகள் திருட்டுப் போயுள்ளன.

ஒளி எறி படக் கட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board), மடிகணினிகள் உள்ளிட்ட 40 லட்சம் பெறுமதியான பொருள்கள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் திருட்டுக்குப் பயன்படுத்தியதாக முழங்காவிலைச் சேர்ந்தவரிடமிருந்து வாகனம் ஒன்றும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடமிருந்து முச்சக்கர வண்டி

மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பாடசாலை உபகரணங்களை அடையாளம் காண்பிக்க அதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் மேலும் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா!
Next articleயாழ்.மாவட்டத்தில் கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம் ஆனால் திரையரங்குள் தொடர் முடக்கலில்!