அன்னை பூபதியின் மகளை மிரட்டிய காவல்துறை!

அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாவலடியில் உள்ள எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக அனுஸ்டித்துவருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை அங்கு சென்று அனுஸ்டிக்க வேண்டாம் எனவும் மீறி அனுஸ்டித்தால் கைதுசெய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரை புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது மிகவும் கவலைக்குரியது. இது அரசியல்சார்ந்த செயற்பாடு அல்ல அன்னை பூபதி எனது தாயார் எனது தாயாரின் இறப்பினை நாங்கள் நினைவு கூருகின்றோம். அதில் எந்தவித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர்துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்த போராட்டத்தினையும் நடாத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்திய படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களும் குடும்பமுமே அவரை நினைவு கூருகின்றோம். இவ்வாறான நிலையில் எங்களை குறித்த நினைவினை செய்யவேண்டாம் என தெரிவிப்பது கவலைக்குரியது.

இன்று உலகம் எங்கும் எங்கள் தாயாருக்கு நினைவு தினம் நடாத்தப்பட்டுவரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடாத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என தெரிவித்தார்.

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (19.04.2021)
Next articleமுத்தையா முரளிதரனுக்கு மாரடைப்பு – அவசர அவசரமாக வித்தியாசாலையில் அனுமதி