இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதி வரை வாகன விபத்துக்களினால் 620 பேர் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
மேலும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் சிங்கள சேவையில் இன்று திங்கட்கிழமை காலை ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வாகன விபத்துக்களினால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, நாட்டில் கடந்த 10 வருடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் சுமார் 27ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தில் 29ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், யுத்தத்தை விடவும் வாகன விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.;
இதனாலேயே, நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட வேண்டுமென தான் யோசனையொன்றை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை இராணுவத்தினரிடமிருந்து ஒழுக்கத்தை பயின்றுக் கொள்வதற்காகவே, இராணுவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தான் யோசனை முன்வைத்ததாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்