நமக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்!

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை தமிழர்கள் நடாத்தினார்கள்.

அந்த அறப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் திலீபன் ஆவார் அவருக்கு பின்னர் அன்னை பூபதி இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தே போராடினார்.

அன்னை பூபதியின் வரலாற்று தடங்கள் வித்தியாசமானது. உறுதியான பெண்மணியாக உலகத்தில் வாழ்கிற பெண்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அறவழியில் தன் மக்களுக்காக மண்ணுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த தியாகியாக அன்னை பூபதி மிளிர்கிறார்.

அவ்வாறான தாயின் நினைவு நாளைக்கூட நாம் கொண்டாட முடியாதவர்களாக நாம் நசுக்கப்பட்டு இருக்கிறோம். அவர் ஒரு பயங்கரவாதி அல்ல அவர் ஆயுதம் ஏந்தவில்லை துப்பாக்கி ஏந்தி யாரையும் சுடவில்லை யாரையும் சுடவேண்டும் என்று கூட கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாமே அமைதியையும் மனிதாபிமானத்தினையும் மட்டுமே கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.

அதற்காகவே 30 நாட்கள் ஆகாரமின்றி தன்னுயிரை ஈகம் செய்தவரைக்கூட நினைவுகூர முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் நெருக்கடிகளுக்கும் வன்முறைகளுக்கும் முகம் தமிழர்களாக நாம் கொடுக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleசற்றுமுன் யாழில் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா!
Next articleதடுப்பூசியை செலுத்துபவர்களுக்கான வயது வரம்பில் மாற்றம்!