முல்லைத்தீவு கொக்காவில் காட்டுப்பிரதேசத்தில் கொட்டப்படும் கழிவுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்காவிலை அண்மித்த பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் திட்டமிடப்படாத வகையில் திண்ம கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏ9 வீதியின் 236வது மைல் கல்லிற்கும் 237வது மைல் கல் அமைந்துள்ள பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியின் மேற்கு பக்கமாக சுமார் 500 மீட்டர் தொலைவில் இவ்வாறு திண்ம கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.

மிக மோசமான வகையில் எந்தவொரு திண்ம கழிவகற்றல் முறையையும் பின்பற்றாது, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் கவலையின்றி இவ்வாறு திண்ம கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை அவதானித்த எமது செய்தியாளர் கழிவகற்றலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் இவ்விடயம் தொடர்பில் இவ்வாறு வினவினார்.

அதன்போது , தமது மேலதிகாரியான ஒலுமடு அலுவலக பொறுப்பதிகாரியே இவ்வாறு குறித்த இடத்தில் கழிவுகளை கொட்டச் சொன்னதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரே இவ்வாறு அனுமதித்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த அதிகாரியுடன் தொடர்பு கொண்ட குறித்த ஊழியர்கள் அவரிடம் தொலைபேசியில் உரையாடுமாறு ஊடகவியலாளரை கோரியிருந்தனர்.

அதற்கு அமைவாக அவருடன் உரை யாடும்போது அவர், குறித்த இடம் தமக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அப்பகுதியில் சுற்றாடல் பாதுகாப்பு முறைகளை பின்பற்றியதாகவும், அவ்விடத்தை தான் சென்று பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காணி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோரே இவ்வாறு குறித்த இடத்தை அனுமத்தித்ததாகவும், அப்பகுதியில் மறையான கழிவகற்றல் செயற்பாடு இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டது போன்று அப்பகுதியில் எரியூட்டப்பட்ட இடமோ அல்லது, புதைக்கப்பட்ட இடமோ காணப்படவில்லை. ஆங்காங்கே கொட்டப்பட்டு ஆபத்தான பகுதியாக அப்பகுதி காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதே வெளிப்படடையான உண்மையாகின்றது.

இதேவேளை, பொதுமக்கள் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான காணிகளில் குடியிருப்பதாக தெரிவித்து அவர்களை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் குறித்த வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் சட்டவிரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதும், இவ்வாறு முறையற்ற திண்மகழிவகற்றல் செயற்பாடு இடம்பெறுவதும் அவர்கள் கண்களிற்கு தெரியவில்லை என்பது மக்கள் மத்தியில ஆச்சரியத்தை ஏற் படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த பகுதி காட்டு யானைகள் நடமாடும் பகுதி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அங்கு காட்டு விலங்குகளிற்கு எவ்வாறான பாதுகாப்பு காணப்படுகின்றது என்பது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் கண்டுகொள்ளவில்லை என்பதும் ஆச்சரியமாகவே உள்ளது.

அப்பகுதியில் உக்காத பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்டவவை பாதுகாப்பின்றி கொட்டப்பட்டுள்ளன என்பது மிக முக்கியமான விடயமாகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தையும், முல்லைத்தீவு மாவட்டத்தையும் இணைக்கும் தொடர் காட்டுப்பகுதியான குறி்த்த காட்டுப்பகுதியில் அதிகளவான காட்டு விலங்குகள் சுதந்திரமாக நடமாடும் பகுதிகளாக குறித்த இடம் காணப்படுகின்றது.

யானை, கரடி, சிறுத்தை, நரி, மான், மரை, சிறுத்தை, காட்டுப்பூனை உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள் அப்பகுதியை தமது வாழ்விடமாக கொண்டு வாழ்கின்றன.

இவ்வாறான முறையற்ற செயற்பாடு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம், வனவள பாதுகாப்பு திணைக்களம்.

வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட நான்கு அரச திணைக்களங்கள் பொறுப்பற்ற வகையில் தமது கடமையை முறையாக கடைப்பிடிக்க தவறியுள்ளனர் என்பதையே இவ்விடயம் சுட்டிக்காட்டுகின்றது.

இயற்கைக்கு மாறாகவும் , இயற்கையை எதிர்த்தும் வாழ நாம் நினைக்கின்றபோது அவற்றின் சீற்றத்திற்கு ஆளாவோம் என்பதற்கு பல்வேறு அனுபவங்கள் எமக்கு கடந்த காலங்களில் கிடைத்துள்ளது.

இன்று காட்டு யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் கிராமப்புறங்களிற்குள் நுழைவதற்கும் இவ்வாறான காரணங்களே ஏதுவாய் அமைகின்றது.

அதேவேளை காட்டு விலங்குகளிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கண்ணாடி போத்தல்கள், பிளாஸ்ரிக்குகள், கழிவு பொருட்கள் என்பவற்றை காட்டு விலங்குகள் உணவாகவோ உண்பதாலோ அல்லது காயங்களிற்குள்ளாகுவதால் பாதிப்புக்கள் ஏற்படுத்துமிடத்து அவை மக்கள் குடியிருப்புக்கள் நோக்கி நகரவோ அல்லது இறக்கவோ அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் காட்டு விலங்குகளிற்கான பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி மனித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும்.

Previous articleசீமான் முதல்வரானால் இலங்கை மீது படையெடுப்பாரா? சிவாஜிலிங்கம் அதிரடி கேள்வி
Next articleயாழில் உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை – பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை