கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதேபோல் அரசு மருத்துவமனையில் நேற்று 32 வயது வாலிபர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறி இருந்தததால் உடனடியாக அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு பரிசோதனை முடிவு வரும் முன்னரே ஏன் வார்டில் சேர்த்தீர்கள்? என்று கூறி அந்த வாலிபர் தகராறு செய்தார். மேலும் அவர் மருத்துவமனை பணியாளர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இரவில் உணவு வழங்கிய போது, உணவு வழங்கியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி அங்கு இருந்த கதவின் கண்ணாடியை உடைத்ததுடன், எதிரே வந்தவர்கள் மீது எச்சிலை துப்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து இரவு பணியில் இருந்த டாக்டர் அவரிடம் பேச முற்பட்ட போது அவரையும் தாக்க முயற்சித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு தனது மனைவியை வரவழைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். மருத்துவமனை ஊழியர்கள் அவருடன் சமரசம் பேச முயன்றும் கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை வழங்க தலைமை மருத்துவர் சேகர் அந்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous articleபூநகரி பள்ளிக்குடா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!
Next articleவடக்கில் புலிப் பூச்சாண்டியை காட்டி, தமிழ் இளைஞர், யுவதிகளைக் கைதுசெய்வதை உடன் நிறுத்த வேண்டும்!