பௌத்த பிக்குகளை கருவியாக கொண்டு தாக்குதல்கள் இடம் பெறலாம் – எச்சரிக்கையாக இருங்கள்

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. அடிப்படைவாதிகள் தாக்குதல்களை பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் முன்னெடுக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை எதிர்தரப்பினர் அறிந்திருப்பார்களாயின் நாட்டு மக்களுக்கு உண்மையினை பகிரங்கப்படுத்த வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பல விடயங்களை குறிப்பிட்டோம்.

அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆட்சியிலிருந்த அரச தலைவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது தான் உண்மையான விடயம்.

எனினும் மாறாக எம்மை அடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் அலட்சியப் போக்கில் செயற்பட்ட பொறுப்பிலிருந்த அனைத்து தரப்பினரும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தற்போது போர்க் கொடி தூக்குவது வேடிக்கையான விடயமாக காணப்படுகின்றது.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியினர் 2018 ஆம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்புகொண்டு பல செயற்திட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்தார்கள்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இப்பராஹிம் தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையாவார் .இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவிக்க முடியாது.

அத்தோடு இஸ்லாமிய அடிப்படைவாதம் புற்றுநோய் போன்றது. அதனை விரைவாக இல்லாதொழிக்க முடியாது பொறுமையுடன் கையாள வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் மாத்திரமே தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வமைப்புக்களின் கொள்கைகள் வியாபித்துள்ளது. ஆகவே அடிப்படைவாதிகள் எந்நேரத்திலும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த துறவி போன்று வேடமிட்டும் தாக்குதல்களை நடத்தலாம். மீகலாவ பிரதேசத்தில் ஒருவர் பௌத்த பிக்கு போல் வேடமிட்டு பௌத்த விகாரைக்கு வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே பௌத்த பிக்குகளை கருவியாக கொண்டு தாக்குதல்கள் இடம் பெறலாம் ஆகவே அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கிறார் ஞானசார தேரர்.

Previous articleகாத்தான்குடி பள்ளிவாசலை சிறுவர்கள் பார்த்தால் இன்னும் பல சஹ்ரான்கள் உருவாகலாம்!
Next articleகர்ப்பகாலத்திலும் வீதியில் நின்று பணியை முன்னெடுக்கும் பெண்!