வடமராட்சி, திக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசிரியை ஒருவரை மோதித்தள்ளி
விட்டு, டிப்பர் வாகனம் தப்பியோடிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திக்கம், விளையாட்டு மைதானத்திற்கு அருகில், காளி கோவிலடி பகுதியில் நேற்று மாலை 4
மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
வெற்றிலைக்கேணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியையொருவர் மோட்டார்
சைக்கிளில் வந்த போது, குறுகிய வளைவொன்றில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஆசிரியையை
மோதித்தள்ளி விட்டு தப்பியோடியது.
அந்த டிப்பர் வாகனம் பொலிசாருக்கு டிமிக்கி விட்டு, தப்பியோடி வந்துள்ளது. நீண்ட தூரமாக
பொலிசார் அந்த டிப்பரை விரட்டி வந்துள்ளனர். திக்கம் பகுதிகளிலுள்ள சந்து,
பொந்துகளிலெல்லாம் பொலிசாருக்கு டிமிக்கி விட்டபடி தப்பியோடி வந்த டிப்பர், ஆசிரியை
மோதித்தள்ளி விட்டு தப்பியோடியது.
அந்த டிப்பர் வாகனத்தின் பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பொலிசார் விரட்டி சென்றனர்.
அவர்கள் விபத்தை பார்த்து விட்டு தொடர்ந்து டிப்பரை விரட்டி செல்வது சிசிரிவி
காணொளிகளில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியையின் வீடு அருகிலேயே இருந்தது. உடனடியாக மீட்கப்பட்ட ஆசிரியை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காலில் பாரதூரமான காயமடைந்துள்ள நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.