நாட்டில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் கொரோனா மூன்றாம் அலை? எச்சரிக்கும் இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் கொவிட் பரவலின் மூன்றாம் அலை ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரமன்றி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர்கள், தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை என்பன சடுதியாக அதிகரித்துள்ளன.

அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் எழுமாறான சோதனைகள் மூலம் கண்டறியப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அத்தோடு அறிகுறியற்ற மற்றும் தொற்று ஏற்பட்ட பின்னர் பாரதூரமான நிலைமை ஏற்படுவதையும் மருத்துவர்கள் அவதானித்துள்ள நிலையில் தற்போதைய வைரஸ் விரைவாக தொற்றுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இளம் நோயாளர்கள் மத்தியில் பாரதூரமான அறிகுறிகளும் அவதானிக்கப்படும் நிலையில் கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பிள்ளைகள் மத்தியில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிதுள்ளது.

இந்நிலையில் ஆய்வுகூட ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து, சடுதியாக தொற்றும் சாத்தியமுள்ள புதியதொரு உருமாறிய வைரஸ் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த வைரஸ் இலங்கையில் ஏற்கெனவே இருந்த உருமாறிய வைரஸில் இருந்து தோன்றியதாக அல்லது வேறொரு நாட்டில் இருந்து இலங்கைக்குள் புதிதாக வந்திருக்கக்கூடிய வைரஸா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்தகைய புதிய வைரஸ் பரவுவதன் சாத்தியம் காரணமாக, ஒவ்வொரு பிரஜையும் மூன்றாம் அலையின் விளைவுகளைப் புரிந்து கொள்வது முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய வைரஸ் சடுதியாக பரவக்கூடிய ஆற்றல்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்குமாயின், ஆகக்கூடுதலானோருக்கு தொற்று ஏற்படலாம். அதன் மூலம் பாரதூரமான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனைகள்; கையாள முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்படக் கூடும். இது கூடுதலான மரணங்களுக்கு வழிவகுக்கும்.

உருமாறிய புதிய வைரஸ், வயது முதிர்ந்தவர்களை விடவும் இளவயதினரை கூடுதலாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிகப்பட்டுள்ளது. எனவே, நாட்டின் சகல பிரஜைகளும் கொவிட்-19 தொற்றும் அபாயத்தைத் தணிப்பதற்காக சாத்தியமான சகல பொதுச் சுகாதார நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக அனுசரிப்பது மிகவும் முக்கியமானது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, முகக் கவசம் அணிவதும், ஒரு மீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளி பேணுவதும், அடிக்கடி கைகழுவுவதும் மிகவும் அத்தியாவசியமானவை. கூட்டமான ஸ்தானங்களில் இருந்து விலகியிருப்பது முக்கியமானது. சகல பொதுச் சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அனுசரித்து, மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியில் செல்வது சிறந்தது எனவும் இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Previous articleதிருமண மேடையில் காத்திருந்த மணமகள் : குப்பையில் கிடந்த நகையால் நடந்த திருமணம்
Next articleஅத்தியாவசிய தேவைகளுக்காக இருவர் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி? புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது