பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மூன்றாம்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 229-3

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது களத்தில் திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடனும் ஒப்பிடுகையில், இலங்கை கிரிக்கெட் அணி 312 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

பல்லேகல மைதானத்தில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 541 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜ்முல் ஹொசைன் 163 ஓட்டங்களையும் மொமினுல் ஹக் 127 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், விஷ்வ பெனார்டோ 4 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால், லஹிரு குமார மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில், லஹிரு திரிமன்னே 58 ஓட்டங்களுடனும் ஒசேத பெனார்டோ 20 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மத்தியூஸ் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட், மெயிடி ஹசன் மற்றும் தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை, இலங்கை அணி நாளை தொடரவுள்ளது.

Previous articleஅத்தியாவசிய தேவைகளுக்காக இருவர் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி? புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது
Next articleசிறுவர், இளையோர் மத்தியில் தொற்று பரவும் ஆபத்து?