பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக நடைபயணம் ஆரம்பம்!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE BAN)’ எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான (Wales to Westminster – W2W) இந்த மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய உட்துறை அமைச்சுக்கு 90 நாட்கள் கால அவகாசத்தை சிறப்புத் தீர்ப்பாயம் வழங்கியிருந்தது.

இந்தக் காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தும் வகையில் lifttheban.uk எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஊடாகவே விடுதலைப் புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அந்த நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தை அறியப்படுத்தும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.

பிரித்தானிய வாழ் தமிழர்கள் தமது பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலகுவாக தடை நீக்கத்துக்கான தமது விருப்பினை இந்த இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்ற நிலையில், பொதுமக்களுக்கு இது தொடர்பாக அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான தேவராஜா நீதிராஜா, இராஜதுரை பார்த்தீபன் ஆகியோருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், மக்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் இந்த நடைபயணத்தல் இணைந்துகொண்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

Previous articleமே 18க்கு முன்னர் இந்தியாவில் 2 லட்சம் பேர் இறந்து இருப்பார்கள்!
Next articleயாழில் யுவதியைபின் தொடர்ந்து சென்று கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!