வவுனியாவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் அதிரடியாக சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

வவுனியாவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கோவிட் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் தற்போது 12 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார பிரிவினரால் 2020 ஆம் ஆண்டு 11,168 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு 8568 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 636 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 3 மரணங்கள் பதிவாகியுள்ளன. 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் வவுனியா மாவட்டத்தில் உள்ளன.

இந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் 528 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். மூன்றாவது கோவிட் அலை என்ற அடிப்படையில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன.

சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அத்தியாவசிய தேவைக்கு வீட்டிலிருந்து 2 பேர் வெளியேறலாம். பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களிலிருந்து கடமைகள் தேவைப்படுமாக இருந்தால் கிராம மட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து உங்களுக்கான முடிவைப் பெற முடியும். நகரத்திற்குள் வர வேண்டியதில்லை.

அதேபோல் கல்விச் செயற்பாடுகளில் பாடசாலை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு தரப்பினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி வடக்குக்குப் பிரவேசிப்பவர்கள் சம்மந்தமாக விசாரித்து அறிவார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் நோன்பு நடவடிக்கைக்காகப் பள்ளி வாசல்களில் 50 பேர் ஒன்று கூட முடியும். திருமண நிகழ்வில் 150 பேருக்கும் அனுமதி வழங்கப்படுவதுடன், விவசாய உற்பத்திகள் விற்பனை செய்வது தொடர்பில் பிரச்சனை ஏற்படும் போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு அறிவிப்பதன் மூலம் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும்.

ஒப்பந்தக்காரர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வேலை செய்ய வேண்டும். புதிய வர்த்தமானி அறிவுறுத்தலின் பிரகாரம் செயற்பட்டு கோவிட் தொற்றைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleநாட்டில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – அஜித் ரோஹண
Next articleஇலங்கையில் கஞ்சா பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும் – டயனா கமகே