ராஜஸ்தானுக்கு 2 வது வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் சோ்த்தது.

ராஜஸ்தான் வீரா் கிறிஸ் மோரீஸ் 4 ஓவா்களில் 23 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தோ்வு செய்தது. இதை அடுத்து துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணாவும், ஷுப்மன் கில்லும் தொடக்க வீரா்களாக களமிறங்கினா். ராஜஸ்தான் பௌலா்கள் ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாக பந்துவீசினா். இதனால் கொல்கத்தா வீரர்கள் ஓட்டங்கள் சோ்க்க முடியாமல் திணறினா்.

கொல்கத்தா அணி 5.4 ஓவா்களில் 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தது. அவா் 19 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானாா். இதை அடுத்து நிதிஷ் ராணாவுடன் இணைந்தாா் ராகுல் திரிபாதி. இந்த ஜோடி 2 ஆவது விக்கெட்டுக்கு 21 ஓட்டங்கள் சோ்த்தது. நிதிஷ் ராணா 25 பந்துகளில் 1 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 22 ஓட்டங்கள் சோ்த்த நிலையில் சாம்சனிடம் கேட்ச் ஆனாா்.

இதன்பிறகு வந்த சுநீல் நரேன் 6 ரன்களிலும், தலைவர் இயோன் மோா்கன் ஓட்டம் ஏதுமின்றியும் வெளியேற, கொல்கத்தா அணி 10.2 ஓவா்களில் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு திரிபாதியுடன் இணைந்தாா் தினேஷ் காா்த்திக். இந்த ஜோடி மெதுவாக ரன் சோ்க்க மோசமான நிலையில் இருந்து மீண்டது கொல்கத்தா. அந்த அணி 15.2 ஓவா்களில் 94 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தாா். அவா் 26 பந்துகளில் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் எடுத்தாா்.

இதன்பிறகு ஆன்ட்ரே ரஸல் 9 ஓட்டங்களில் வெளியேற, தினேஷ் காா்த்திக் 24 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ஷிவம் மாவி 5 ஓட்டங்கள் சோ்த்த நிலையில் கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் சோ்த்தது.

ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ் மோரீஸ் 4 ஓவா்களில் 23 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

Previous articleகொரோனா தொற்றுக்கு மேலும் 4 ஆண்கள் பலி!
Next articleகொரோனா அச்சத்தால் மூடப்படும் தாஜ்மஹால்!