நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் பிணையில்; குற்றமே புரியாத தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்!

நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் ஒரிரு மாதங்களில் பிணையில் வெளியே செல்கின்றார்கள். ஆனால் குற்றமே புரியாத தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே பத்து வருடங்களுக்கு மேலாக சிறைப்பிடிக்கபட்டிருக்கின்றார்கள் இது தான் இலங்கை அரசின் தர்மமா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான
அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இன்று வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசியல் கைதிகள் தற்போது கூறும் விடயம் என்னவெனில் தங்களுடைய வழக்குகள் நடைபெறட்டும் . ஆனால் வழக்கில் என்ன கூறுகின்றார்கள் எனபார்ப்போம். உறவுகள் வரமுடியாது, உறவுகளை சந்திக்க முடியாது, எங்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் பெரிய கட்டுப்பாடுகள் விதித்தாவது ஏனைய கைதிகளுக்கு பிணை வழங்குவது போல் எமக்கும் வழங்கி எம் உறவுகளுடன் வீட்டில் வசிக்க விடுங்கள். எங்களுக்கு அதுவே போதுமானது.

தற்போது கொரோனாவை காரணம் காட்டி பொது வைத்தியசாலைக்கு கிளினிக் கொண்டுசெல்வதில்லை. தமிழ் அரசியல்வாதிகள் சந்தர்பத்திற்கேற்ப இவர்களின் பிரச்சினைகளை எடுக்கிறார்களே தவிர குறைந்தது இவ்வாறான காலகட்டத்திலாவது இவர்களை சென்று பார்ப்பதற்கு எவ்வித முயற்சியும் இல்லாமல் இருக்கிறார்கள்.

அரசியல் கைதிகளின் தேவைகளைக்கூட பூர்த்தி செய்தற்கு யாருமில்லாத சூழ்நிலை காணப்படுகின்றது. உறவுகள் யாரும் வரமுடியவில்லை, உடு புடவைகளாக இருக்கலாம் அல்லது அன்றாட தேவை பொருட்களை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. காெரோனா வந்து ஒரு வருடத்தை கடக்கிறது. ஆகவே இந்த வைரஸ் தொற்று காலத்திற்குள் அவர்களின் அன்றாட தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே இதற்காக அரசியல்வாதிகள் என்ன செய்ய போகிறார்கள், இதற்கான தீர்வுகள் என்ன என்பதையே அரசியல் கைதிகள் கேட்கிறார்கள்.

இவர்களுக்குரிய வழக்குகள் நீண்ட காலத்திற்கு பிற்போடப்பட்டு கொண்டிருக்கின்றது. போனவருடம் கொரோனா வைரஸை காரணம் காட்டி இந்த வருடம் மே மாதம் 21 ம் திகதிக்கே வழக்கு திகதியிடப்பட்டிருக்கின்றது. இவர்களை அன்றையதினம் நீதிமன்றுக்கு அழைத்து செல்கின்றார்களா? இல்லையா? என்பது அன்றைய தினமே தெரியும்.

கொரோனா காலத்தில் ஏனைய கைதிகளுக்கு பிணை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இவர்களுக்கெதிராக நீதிமன்றில் குற்றங்கள் இருக்கலாம் ஆனால்
அரசியல் தமிழ் கைதிகள் நிர்வாகத்திற்கெதிராக எவ்வித குற்றமும் செய்யாதவர்கள். ஆகவே இவர்களுக்கும் கொரோனா காலத்தில் பிணை கொடுத்து அனுப்பியிருக்கலாம்.

ரவி கருணாநாயக்க போன்றவர்கள் முக்கிய குற்றவாளிகள் இவர்கள் மத்திய வங்கியிலேயே கொள்ளையடித்தவர்கள். அதாவது ஒரு நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்த இவர்களே பயங்கரவாத குற்றத்திற்குள் வரவில்லை. இவர்களுக்கு பிணை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அரசியல் தமிழ்கைதிகளை இவ்வளவு காலமும் சிறை வைத்திருந்தும் அவர்களுக்கு பிணை கொடுக்க முடியாவிட்டால் யாரில் பிழை, சட்டத்தில் பிழையா? அல்லது சட்டத்தை வைத்து பயன்படுத்துபவர்களில் பிழையா? இந்த இனவாதம் தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் என்ன கூற போகின்றார்கள்.

அரசியல் வாதிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய தேர்தல் அரசியலுக்குள் நிற்கின்றார்களே தவிர அரசியல் கைதிகள் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. அரசியல் வாதிகள் இவர்களை நேரில் சென்று பார்வையிட்டால் மட்டுமே தமிழ் அரசியல் கைதிகளின் தேவைகள், பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொள்ள முடிவதோடு அவர்களுக்கான தேவைகளையும் நிவர்த்தி செய்ய முடியும். அரசியல் கைதிகளை மையப்படுத்தி அரசியல் செய்பவர்கள் அரசியல் கைதிகளையாவது நேரில் சென்று பார்வையிடுவது நல்லது என மேலும் தெரிவித்தார்.

Previous articleஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அனைத்தும் அழிப்பு?
Next articleயாழ்.பலாலி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து-10ற்கும் மேற்பட்ட படையினர் வைத்தியசாலையில்!