வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பல்வேறு தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்த வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக மோசமாக இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை சரிசெய்யாவிட்டால் டெல்லியே சீரழிந்து விடும் என்று கூறியிருந்தார். அப்போது, மத்திய அரசுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடுக்கு காரணம் என்ன உள்ளிட்ட விஷயங்களை கேட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய, மாநில அரசுகளும் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும். எனென்றால் கொரோனாவின் 2வது அலை அடுத்து சில வாரங்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மிக மோசமாக இருக்கும். இது மக்களை அச்சப்படுத்துவதற்காக நாங்கள் சொல்லவில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை. எனவே கொரோனாவை முழு அளவில் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசுகளும் ஒருங்கிணைந்து தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும், மத்திய அரசு ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை சுமூகமாக மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றார். தமிழகத்திலும் அடுத்த சில வாரங்களுக்கு கொரோனா மிக மோசமாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசும் கொரோனா 2வது அலை அடுத்த சில வாரங்களுக்கு மிக மோசமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது